வேட்டி,சட்டையில் வாழை இலையில் தமிழின் பாரம்பரிய உணவினை வி.கே. பாண்டியன் சாப்பிடுவது போன்று ஒரு வீடியோவை வெளியிட்டு பாண்டியனை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமானப்படுத்துகிறது என்று ஆவேசப்பட்டுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே கூத்தப்பன் பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்த வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் அதிகாரி ஆகி, ஒடிசா முதல்வரின் தனிச்செயலாளர் ஆகி, இன்று ஒடிசா மக்களின் அசைக்க முடியாத சக்தியாக உயர்ந்திருக்கிறார். இவர் இருப்பதால் பிஜேடியை வீழ்த்து பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம் பாஜகவுக்கு அதிகமாகவே இருக்கிறது.
மேலும், நவீன் பட் நாயக்கிற்கு அடுத்ததாக அவரின் அரசியல் வாரிசாக வி.கே.பாண்டியன் வரும் வாய்ப்பு உள்ளதால், ஒடிசாவை ஆளும் வாய்ப்பும் பாண்டியனுக்கு உள்ளதால், ஒரு தமிழன் எப்படி ஒடிசாவை ஆளலாம் என்று ஆவேசம் அடைகிறது பாஜக. இதனால் பாண்டியனுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.
அப்படித்தான் பாண்டியன் தமிழர் பாரம்பரியத்தில் வேட்டி சட்டை அணிந்து வாழை இலையில் சாப்பிடுவது போன்றும், அதை ஒருவர் கிண்டல் செய்வதுபோன்று பாஜக பிரச்சார வீடியோ வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘’தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்!அறிந்தவர்கள்!
ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!
தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது.
வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.
உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள்! என்பது பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை.
ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது. எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக..எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?
கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர்.
ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது. மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்!’’என்று தனது எதிர்க்குரலை பதிவு செய்திருக்கிறார்.