கல்வி நுட்பவியல் நிறுவனமான BYJU’s நிறுவனம் தனது 14,000 ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
BYJU’s நிறுவனம் எதிர்கொண்டுவரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் பெங்களூரில் உள்ள தலைமையகத்தைத் தவிர அனைத்து அலுவலகங்களையும் காலி செய்துள்ளது.
1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வரும் பெங்களூரில் உள்ள IBC அறிவுப் பூங்காவில் உள்ள தனது தலைமையகத்தை தவிர – நாடு முழுவதும் உள்ள மற்ற அனைத்து அலுவலக வளாகங்களில் இருந்தும் BYJU’s காலி செய்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
செலவீனங்களை குறைக்கும் விதமாக, நாடு முழுவதிலும் உள்ள அலுவலகங்களுக்கான வாடகை ஒப்பந்தங்களை BYJU’s நிறுவனம் புதுப்பிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், 6-10 ஆம் வகுப்பு மாணவர்கள் படித்து வரும் BYJU’s நிறுவனத்தின் சுமார் 300 கல்வி மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நிதிப் பிரச்சனைகளால் போராடி வரும் BYJU’s, 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் சுமை காரணமாகவும் தனது பங்குதாரர்களிடம் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.
ஒரு காலத்தில் $20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் பெரு நிறுவனமாக விளங்கி வந்த BYJU’s, கடந்த ஆண்டில் மட்டும் நிறுவனத்தின் மதிப்பீடு 90 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
BYJU’s நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் கடந்த மாதம் பைஜு ரவீந்திரனை தலைமை செயல் அதிகாரி (CEO) பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், Byju’s நிறுவனத்தை நிர்வகிக்க ‘பைஜு ரவீந்திரன்’ தலமையிலான நிர்வாகம் தகுதியற்றது என்று அறிவிக்க தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLT), 4 பங்குதாரர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.