சிஏஏ சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று பலரும் போராடி வரும் நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ சட்டத்திற்கு தடை கொண்டு வரப்படும் என்று ராகுல்காந்தியும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் சொல்லி வரும் நிலையில், நடைமுறைக்கு வந்தது சிஏஏ சட்டம். முதற்கட்டமாக நேற்று 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 14 பேருக்கு ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் இந்திய குடியுரிமை சான்றிதழை நேரில் வழங்கி இருக்கிறார்.
31.12.2014 அன்று அல்லது அதற்கு முன்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட முஸ்லீம் அல்லாத இந்து, ஜெயின், சீக்கியர், பவுத்தம், பார்சி, கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக கடந்த 2019ம் ஆண்டில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது ஒன்றிய பாஜக அரசு.
இந்த சட்டம் பாரபட்சமானது என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த சட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா முதல் பலரும் சொல்லி வருகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில், சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2019ல் ஜனாதிபதி சிஏஏ சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி அன்று சட்ட விதிகள் அறிவிக்கப்பட்டன. அதன் பின்னர், சிஏஏ சட்டம் அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறித்தது.
சிஏஏ சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக தனியாக இணையதளமும் உருவானது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் மூன்று நிலைகளில் பரிசீலிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கட்ட பரிசீலனைக்கு பின்னர் முதற்கட்டமாக நேற்று 300 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 14 பேருக்கு டெல்லியில் நடந்த விழாவில் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, நேற்று நேரில் வழங்கி இருக்கிறார்.
சிஏஏ சட்டம் அமலுக்கு வந்ததால் ‘இது ஒரு வரலாற்று நாள்’ என்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால், வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் என்றே பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.