சிதம்பரம் நடராஜர் கோயிலில் 20 தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடலாமா? ஆகம விதியில் இருக்கிறதா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட வல்லம்படுகை முகாம் செயலாளர் இளையராஜா. இவர் நேற்று முன் தினம் இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றிருக்கிறார். வல்லம்படுகையில் இருந்து சிதம்பரம் பக்கத்து ஊர் என்பதால் அடிக்கடி நடராஜர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது இவரது வழக்கம்.
அப்படித்தான் 7 ஆம் தேதி இரவு அன்று கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கொஞ்சம் இளைப்பாருவதற்காக ஆயிரம் கால் மண்டபத்திற்கு சென்றிருக்கிறார். அங்கே சென்ற அவருக்கு ஒரே அதிர்ச்சி. அங்கே 20 தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
கோயிலுக்குள் அதுவும் தீட்சிதர்கள் இப்படிச்செய்யலாமா? என்ற அதிர்ச்சியில் இதை வெளி உலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்று தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த தீட்சிதர்கள் ஓடிவந்து வீடியோ எடுக்க கூடாது என்று சொல்ல, ஏன் எடுக்கக்கூடாது என்று இவர் கேட்க, ’’இது எங்கள் கோயில் எங்கள் இஷ்டம்’’ என்று சொல்லி இருக்கிறார்கள்.
உடனே இளையராஜா, ‘’கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடலாமா? ஆகம விதியில் அது இருக்கிறதா?’’ என்று கேட்க, ஆத்திரமடைந்த தீட்சிதர்கள் அவரை அடித்து செல்போனை பிடுங்கிக்கொண்டு , அரை மணி நேரம் சிறை வைத்த பின்னர் துரத்தி இருக்கிறார்கள்.
அன்று இரவு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட இளையராஜா, நேற்று 8ம் தேதி காலையில் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.
உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் இப்போது கிரிக்கெட் மைதானமாக மாறிவிட்டதே, சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், பாஜக நிர்வாகி எச்.ராஜாவோ, ‘’சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறுமில்லை. கோயில் கருவறையில் கிரிக்கெட் விளையாடினால்தான் தவறு’’ என்கிறார்.