கனடா நாட்டில் நடந்து முடிந்த 2019 மற்றும் 2021 பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டுத் தலையீடுகள் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருந்தன.
அந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவும் உண்மையைக் கண்டறியும் வகையில், ‘வெளிநாட்டுத் தலையீடுகள் ஆணையம்'(Foreign Interference Commission) அமைத்து கனடா அரசு கடந்த ஆண்டு விசாரணையைத் தொடங்கி இருந்தது.
இந்த சூழலில், கனடாவின் ‘வெளிநாட்டுத் தலையீடுகள் ஆணையம்’ பொதுத் தேர்தல்களின் போது இந்தியத் தலையீடுகள் பற்றிய கூற்றுக்களை ஆராய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை வழங்குமாறு கனடா அரசிடம் கேட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அந்த ஆணையத்தின் அறிக்கைகளில், 2019 மற்றும் 2021 தேர்தல்களில் சீனா, ரஷ்யா மற்றும் பிற வெளி நாடுகள் அல்லது அரசு சாரா அமைப்புகளின் தலையீடுகள் பற்றி விசாரிக்க மட்டுமே விதிகள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆணையம் நேற்று(ஜனவரி 24) வெளியிட்ட அறிக்கையில், தேர்தல்களில் இந்தியத் தலையீடுகள் குறித்து விசாரணை செய்ய கனடா அரசிடம் ஆவணங்களைக் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியா-கனடா இடையேயான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவின் இந்த நடவடிக்கை மேலும் கடுமையான பின் விளைவுகளுக்குக் கொண்டு செல்லும் என அஞ்சப்படுகிறது.
இந்தியா குறித்து விசாரணையைத் துவங்கி உள்ள கனடாவின் ‘வெளிநாட்டுத் தலையீடுகள் ஆணையம்’, தனது இடைக்கால அறிக்கையை வருகிற மே 3-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இறுதி விசாரணை அறிக்கையை இந்தாண்டு இறுதிக்குள் வெளியிடவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
‘இந்தியா-கனடா மோதல்’
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கனேடிய மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலையை இந்தியா நடத்தியதாக அந்நாட்டு பிரதமர் ட்ரூடோ நேரடியாகக் குற்றம் சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
முகமூடி அணிந்த தாக்குதல்காரர்களால் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கனடா இந்தியா மீது பழி சுமத்தியது. இந்த குற்றச்சாட்டு இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதன் விளைவாகக் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும் விசாக்களை இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்ட நிலையில், இதுவரை அதில் முன்னேற்றம் காணப்படவில்லை.