லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அந்த பதவிக்கான ரேஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் முன்னணியில் உள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்த், டொமினிக் லெப்லாங்க், கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், மெலனி ஜோலி, பிரான்சுவா-பிலிப் மற்றும் மார்க் கார்னி போன்றோர்களுடன் தலைவர் பதவிக்கான போட்டியில் களம் காண்கிறார்.
அனிதா ஆனந்த்
கடந்த 2021-ம் ஆண்டில், அனிதா ஆனந்த் கனடாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சரான போது, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட கொந்தளிப்பான காலங்களில் தீர்க்கமான தலைமைத்துவத்திற்கான நற்பெயரைப் பெற்றார்.
கனேடிய ஆயுதப் படைகளில் நிலவிய பாலியல் குற்றங்கள் போன்ற முக்கிய சிக்கல்களைச் சமாளித்தார். முக்கிய சீர்திருத்தத்திற்கான அவரது அணுகுமுறை கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மரியாதையையும் லிபரல் கட்சி விசுவாசிகளிடையே வலுவான ஆதரவையும் பெற்றுத் தந்தது.
கனடாவில் நோவா ஸ்கோடியாவில் பிறந்து வளர்ந்த அனிதா ஆனந்த், 1985-ல் தலைநகர் ஒன்டாரியோவுக்கு குடிபெயர்ந்தார். அவரது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். அவரது தந்தையின் குடும்பம் தமிழ்நாட்டில் உள்ள சென்னையை பூர்வீகமாக கொண்டதாகவும், அவரது தாயாரின் குடும்பம் பஞ்சாபை பூர்வீகமாக கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அனிதா ஆனந்த் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். அவர் குயின்ஸ் பல்கலைக்கழகம், டல்ஹவுசி பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
அனிதா ஆனந்த் 2019-ல் அரசியலில் நுழைந்தார். ஒன்டாரியோவின் ஓக்வில்லி நாடாளுமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், விரைவாக ட்ரூடோவின் அமைச்சரவையில் இடம்பெற்றார்.
பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர், தேசிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் கருவூல வாரியத்தின் தலைவர் உட்பட அனிதா ஆனந்த் தொடர்ந்து பல உயர் பதவிகளை வகித்துள்ளார். அவர் 2024-ல் போக்குவரத்து அமைச்சராக ஆனதில் இருந்து, கனடாவின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும், போக்குவரத்துத் துறையின் பாதுகாப்புச் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளித்து சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வேயை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
லிபரல் கட்சியின் புதிய தலைவராக அனிதா ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டால், அனிதா ஆனந்த், கனடாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற வரலாற்றை படைப்பார். அனிதா ஆனந்தின் சாத்தியமான தலைமை பொறுப்பு, கனடிய அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் என கருதப்படுகிறது.
கடந்த ஜனவரி 6 அன்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நீடித்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பதவி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் ட்ரூடோ, லிபரல் கட்சி புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தவுடன் பதவி விலகுவதாகக் கூறியுள்ளார்.
கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வரும் 2025 அக்டோபர் 20 அன்று நடைபெற உள்ளது. அதற்கு இடைப்பட்ட காலங்களில் லிபரல் கட்சியின் புதிய தலைவராக தேர்வாகும் ஒருவர் பிரதமர் பொறுப்பை வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.