இளைஞரையும் இளம்பெண்ணையும் மதுபோதையில் காரை ஏற்றிக்கொன்ற சிறுவனை விபத்து குறித்து கடிதம் எழுது , போக்குவரத்து போலீசில் 15 நாட்கள் பணி செய், மருத்துவரிடம் சென்று மனநல ஆலோசனை செய் என்று நிபந்தனையில் ஜாமீன் அளித்தது அதிர்ச்சி அளித்திருக்கிறது. இதுமாதிரியான நூதன தண்டனை அளித்த நீதிபதிக்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாநகராட்சியில் உள்ள எரவடாவில் கல்யாணி நகர் சந்திப்பில் கடந்த ஞாயிறு அன்று அதிகாலையில் அதி வேகமாக வந்த போர்ஷே கார் பைக் மீது வேகமாக மோதியதில் பைக்கில் வந்த இளைஞரும், பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணும் உயிரிழந்தனர்.
நம்பர் பிளேட் இல்லாத அந்த காரை ஓட்டி வந்தவர் சிறுவன் என்றும், அவர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவந்ததும் அப்பகுதியினர் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
எரவடா போலீசார் விசாரணையில், உயிரிழந்த 2பேரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அனீஷ் அவதியா(24), அஷ்வினி கோஷ்தா(24) என்பதும், ஐடி பொறியாளர்கள் இருவரும் புனேவில் தங்கியிருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது. அஷ்வினி கோஷ்தா, அனீஷ் அவதியாவின் நண்பர் அகிப் முல்லா(24) அளித்த புகாரின் பேரின் இந்த சம்பவம் குறித்து எரவடா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணையில் சொகுசு காரை ஓட்டிவந்த நபர் 17 வயது சிறுவன் என்பதும், புனேயில் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது . மதுபோதையில் காரை ஓட்டிவந்ததாக புகாரில் கூறப்பட்டிருந்ததால் அந்த சிறுவனின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த வழக்கு குறித்து புனே நகர போலீஸ் ஆணையர் அமிதேஷ் குமார், ‘’குற்றம் சாட்டப்பட்டவர் மைனர். அவர் மீது 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசி, மோட்டார் வாகன சட்டத்தின் பிற பிரிவுகளும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
அந்த சிறுவனுக்கு மது வழங்கிய பார் மீதும் சிறார் நீதிச்சட்டத்தின் 75 மற்றும் 77வது பிரிவின் கீழ நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’’ என்ற தெரிவித்துள்ளார்.
பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றதற்காக நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார் அந்த சிறுவன். இதற்காக முந்த்வா பகுதியில் உள்ள பார்க்கு சென்று விடிய விடிய கொண்டாடி தீர்த்துவிட்டு மதுபோதையில் அதிகாலையில் 2.30 மணியளவில் அதிவேகமாக காரை ஓட்டிவிட்டு வந்திருக்கிறார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதி இருக்கிறது. இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த பகுதியின அந்த சிறுவனை பிடித்து வெளுத்து எடுத்துள்ளனர் என்று எரவடா போலீசார் விபத்து குறித்து தெரிவித்துள்ளனர்.
விமான நிலையப்பகுதியைச் சேர்ந்த அனீஷும், காரடி பகுதியைச் சேர்ந்த அஸ்வினியும் நண்பர்களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.
போர்ஷே கார் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததால் அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுவன் சென்ற பார்க்கு போலீசார் சென்றபோது, அந்த பார் மூடப்பட்டு கிடந்ததால் சம்பவம் குறித்து அறிந்ததும் தலைமறைவாகி விட்டார்கள் என்பதை போலீசார் உறுதிப்படுத்திக் கொண்டனர். சிறுவனின் ரத்த மாதிரிகளில் அவர் மதுபானம் அருந்தி இருந்ததும் உறுதியானது.
இதன் பின்னர் அவரை நேற்று மதியம், விடுமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீசார். அந்த சிறுவனை வயது முதிர்ந்தவராக கருதி அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் போலீசார் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதற்கு மறுத்த நீதிபதி, அந்த சிறுவனுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்துவிட்டார்.
அந்த நிபந்தனைதான் தற்போது விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது, விபத்து குறித்து அந்த சிறுவன் ஒரு கட்டுரை எழுத வேண்டும் மற்றும் எரவட்ரா போக்குவரத்தில் போலீஸில் 15 நாட்கள் அந்த சிறுவன் பணியாற்ற வேண்டும் என்பதுதான் நிபந்தனை. இதுதான் நிபந்தனை என்று அந்த சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்டிவகேட் பிரஷான் பாட்டீல் கூறியுள்ளார்.
மேலும், மதுப்பழக்கத்தில் இருந்து அந்த சிறுவன் வெளியேற மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும். மனநல ஆலோசனைகளையும் பெற வேண்டும். இதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனையில் குறிப்பிட்டுள்ளதாக எஸ்டிவகேட் பிரஷான் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதெல்லாம் என்னமோ கடுமையான நிபந்தனைகள் என்பது மாதிரி, நீதிமன்றத்தின் கடுமையான நிபந்தனைகளை பின்பற்றுவது எனது கட்சிக்காரரின் கடமை. அதை அவர் செய்துவிடுவார் என்கிறார்.
மதுபோதையில் , நம்பர் பிளேட் இல்லாத காரை ஓட்டி, அதுவும் லைசென்ஸ் இல்லாமல் காரை ஓட்டி இரண்டு உயிர்களை காவு வாங்கிய சிறுவனுக்கு இதெல்லாம் ஒரு தண்டனையா? நீதிமன்றம் ஏன் இப்படி ஒரு மோசமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.