
சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டில் சாதித் தீண்டாமை இன்னும் முற்றிலும் ஒழிந்துவிடவில்லை என்பதன் அடையாளமாக சிவகங்கை மாவட்டத்தில் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரை பிற சாதியினர் தாக்கியிருக்கும் கொடூர சம்பவம் நடந்துள்ளது. கல்லூரியில் படிக்கும் அந்த மாணவர் புல்லட்டில் பயணித்தார் என்பதுதான் மற்ற சாதியைச் சேர்ந்த இளைஞர்களால் குற்றமாகப் பார்க்கப்பட்டுள்ளது. அதனால் புல்லட் ஓட்டிய அந்த மாணவரின் கையை வெட்டியுள்ளனர். குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரின் பொருளாதார வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நடந்துள்ள இந்தக் கொடூர நிகழ்வை அரசியல்-சமுதாய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டியுள்ளது.
ஜீன்ஸ் அணிந்து கொண்டு பைக்கில் சுற்றுகிறார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன் பட்டியல் இன இளைஞர்கள் மீது மற்ற சமுதாயத்தினர் குற்றம்சாட்டினர். இதில் தங்கள் சமூகத்துப் பெண் பிள்ளைகளைக் காதலிப்பதற்காகவே இப்படி செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அடக்கம். ஜீன்ஸ் அணிந்த எல்லாரும் காதலிக்கவுமில்லை, திருமணம் செய்து கொள்ளவுமில்லை. எனினும், ஒரு சமுதாயம் தன்னுடைய பழைய வகை உடைகளைத் தவிர்த்து, மற்றவர்களைப் போல உடை அணிவது என்பது அவர்களின் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் கவனிக்கப்படாமல், இன்னபிற சமுதாயத்து பெண்களின் மீது அவர்கள் நடத்துகின்ற உளவியல் தாக்குதலாகவும், சமுதாய சீர்கேடாகவும் பார்க்கப்பட்டது. இது, அரசியல் தளத்திலும் வலிமையாக எதிரொலித்தது. ‘நாடகக் காதல்’ என்று வர்ணிக்கப்பட்டு, அதற்கு எதிரான அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டு காலமாக நடைமுறையில் உள்ள கலப்புத் திருமண உதவித் தொகை குறித்து ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றதைக் கூட, சமுதாயத்தை சீர்குலைக்கும் செயலாக முன்னெடுத்து 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் பரப்புரை செய்யப்பட்டது. தமிழ்நாடு அனைத்து சமுதாயத்தினருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கினாலும் அரசியல்-சமுதாயப் பார்வை என்பது இந்த அளவில்தான் உள்ளது.
நேரடியாக சாதிப்பிரிவினை பேச முடியாத அரசியல் கட்சிகள், பா.ஜ.க போன்ற மதவாத-வகுப்புவாத அரசியல் செய்து அதிகாரத்தைப் பெற்றுள்ள கட்சியின் நிழலில் தங்களை ஒப்படைத்துக்கொண்டு, சாதிப்பாகுபாட்டைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றன. சமுதாயப் பிரதிநிதிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, தேர்தல் களம் வரை பயணிக்கினற் அமைப்பினரும் இதே பாணியைக் கையாள்கின்றனர். பள்ளிக்கூடத்தில் சாதிரீதியாகக் கயிறு கட்டும் பழக்கத்தில் தொடங்கி, கட்சி அரசியல் வரை இளைஞர்கள் நெஞ்சில் சாதி உணர்வு ஊட்டப்படுவதால் அது அவர்களுக்குள் விஷ விதையாக விதைக்கப்பட்டு, நெடுமரமாக வளர்ந்துவிடுகிறது. ஆட்சிக்கு வரும் வலிமையுள்ள தமிழ்நாட்டுக் கட்சிகளும் தங்களுக்கு ஆள்கின்ற வாய்ப்பு கிடைக்கும்போது அதன் வாயிலாக சமத்துவ சமுதாயத்திற்கான திட்டங்களை முன்னெடுக்கின்றன. ஆனால், அந்தக் கட்சிகளின் நேரடி செயல்பாட்டில் இதற்கான விரிவான-வலிமையான செயல்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் ஓட்டு அரசியல் தடுக்கிறது.
தென்மாவட்டங்கள், வடமாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் எனத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சாதி உணர்வு புரையோடிய அமைப்புகள் செல்வாக்குப் பெற்றுள்ளன. அவை பெரிய கட்சிகளுடன் தொடர்பில் இருக்கின்றன. இத்தகைய அமைப்புகள், தேர்தல் நேர ஆதாயத்துக்காக தேர்தல் இல்லாத காலங்களிலும் சாதி அரசியலை முன்னெடுத்து, தனக்கான கூட்டத்தை சேர்த்து, ‘நம்மாளுக’ என்ற அடையாள அரசியலை உருவாக்குகின்றன. இதில் இந்த சாதி, அந்த சாதி என்ற பாகுபாடில்லாமல் எல்லா சாதிகளும் இதனைக் கையாள்கின்றன. பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பா.ஜ.க அரசு கொண்டு வந்தபிறகு, உயர்ந்த சாதிகள் என்று தங்களை சொல்லிக்கொண்டிருந்த அமைப்பினரும், மற்ற சாதியினருக்கு சவால் விடும் வகையில் சாதி அரசியலைக் கையில் எடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் நல்வாய்ப்பாக இதுவரை சாதிக் கண்ணோட்டத்துடனான அரசியல் கட்சியை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வரவில்லை. இதுவரை முதலமைச்சரான பெரும்பாலான தலைவர்கள் பெரும்பான்மை வாக்குபலம் இல்லாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதால் அவர்களுடைய ஆட்சிக்காலங்களில் அனைவருக்குமான சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால்தான் ஜீன்ஸ்-புல்லட் எல்லாமும் எல்லாருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத சாதிவன்மம் ஊறிக் கிடக்கிறது என்பது கவலையும் வேதனையும் தரக்கூடியதாகும்.
புல்லட் ஓட்டி வந்த மாணவரை வெட்டியவர்கள் போன்ற சாதி வெறிக் குற்றவாளிகளுக்கு விரைவில் கடும் தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத்தின் செயல்பாடுகள் அமைந்திட அரசுத்தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். இத்தகைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால், இவர்களை இயக்குபவர்களின் ஃப்யூஸ் பிடுங்கப்படும்.
This post solved some doubts I had, thanks.