தமிழக விவசாயிகளின் நலன் கருதி காவிரி நதிநீர் பிரச்சனையில் இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் கடந்த 11ம் தேதி அன்று நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் 99வது கூட்டத்தில், 12ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் 20 தினங்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையின் படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்லிவிட்டது கர்நாடகா.
இதனால் தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு, தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1.காவிரி நடுவர் மன்றம் 05.07.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தர முடியாது என மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது.
2.காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, உச்சநீதிமன்ற ஆணையின்படி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசிற்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.
3.காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, உச்சநீதிமன்ற ஆணையின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெறுவதற்கு தேவைப்படின் அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் தீர்மானிக்கிறது.
-என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாடு – கர்நாடகா இடையே இருக்கும் காவிரி பிரச்சனை – முழு விபரம்
இரு நாடுகளுக்கிடையே ஓடுகின்ற ஆறுகள் பல இருக்கின்றன. இந்தியாவின் பிரம்மபுத்திரா அதில் ஒன்று. இரு மாநிலங்களுக்கிடைய ஓடுகின்ற ஆறுகளும் நிறைய உள்ளன. காவிரி அதில் ஒன்று. கர்நாடகத்தில் தொடங்கி, தமிழ்நாட்டில் ஓடும் காவிரி நீரில் கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் ஓரளவு உரிமை உண்டு. எனினும், காவிரியை நம்பியே பாசன வசதி பெற்றுள்ள தமிழ்நாட்டிற்கே கூடுதல் உரிமை உண்டு.
1924ல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் 50 ஆண்டுகள் நிறைந்த நிலையில், 1974ல் சுதந்திர இந்தியாவின் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் அந்த ஒப்பந்தம் பொருந்துமா என்ற வாதம் எழுந்தது. ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்பது கர்நாடகத்தின் நிலை. ஒப்பந்தத்தைப் புதுப்பித்தால் போதும் என்பது தமிழ்நாட்டின் நிலை.
1960களின் நடுப்பகுதியிலேயே காவிரியில் இரு மாநிலங்களுக்கானப் பிரச்சினைகள் மெல்ல உருவாகிவிட்டன. 1970களில் இது குற்றச்சாட்டுகளாக வெளிப்படத் தொடங்கின. காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் கர்நாடக அரசு அணைகள் கட்டியதால் தமிழ்நாட்டின் உரிமை மறுக்கப்படுகிறது என்று இங்கும், காவிரியிலும் அதன் கிளை ஆறுகளிலும் அணைகளையும் தடுப்பணைகளையும் கட்டி தமிழ்நாடு தன்னுடைய தண்ணீர்த் தேவையை அதிகரித்துக் கொண்டதால்தான் சிக்கல் ஏற்படுகிறது என்று கர்நாடகா தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
காவிரிப் படுகை விவசாயிகளும் அவர்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசும் தொடர்ந்த வழக்கின் காரணமாக, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், காவிரி நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். 1990ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இடைக்காலத் தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீர் ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா வழங்க வேண்டும் என்றும், இந்தத் தண்ணீரின் அளவை இரு மாநில எல்லையில் உள்ள பில்லிகுண்டு பகுதியில் கணக்கிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. பின்னர், 2007ல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும் வெளியானது. அதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக மேல்முறையீடுகளும் கோரப்பட்டன.
2013ல் ஒன்றிய அரசின் அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து, காவிரி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க காவிரி நதிநீர் வாரியம் அமைக்க வலியுறுத்தப்பட்ட நிலையில், 2018ல் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைப்பும் அமைக்கப்பட்டன. இதன் மூலமாக காவிரிப் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
1970கள் தொடங்கி 2018 வரை தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் மத்திய அரசிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்தன. அதனால் விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினையாகத் திசை திரும்பியது.
தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் தமிழ்நாட்டில் ஒரு நிலையையும் கர்நாடத்தில் இன்னொரு நிலையையும் எடுப்பது வழக்கம். மாநிலக் கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் காவிரிப் பிரச்சினைக்கு காரணம் நீயா-நானா என மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. இரு மாநிலங்களிலும் அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடைபெறுவதும், அவரவர் மாநிலத்திற்கே உரிமை உண்டு என்று பேசுவதும் அரை நூற்றாண்டு காலமாகத் தொடர்கிறது.
தற்போது நாள்தோறும் 1 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது. ஆனாலும், கர்நாடகா தனது மாநிலங்களில் உள்ள அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்று கூறி, 1 டி.எம்.சி.யை வழங்க மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க.வும் கர்நாடகத்தில் காங்கிரசும் ஆட்சி செய்கின்றன. இரண்டும் கூட்டணிக் கட்சிகள் என்பதால், தண்ணீர் அரசியலை வெந்நீராக மாற்றும் முயற்சிகள் நடைபெறும் நிலையில்தான், தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டது.
இரு மாநிலங்களுக்கிடையில் ஆறு ஓடும்போது அதன் கீழ் வடிநிலைப் பகுதிகளுக்கே அதிக உரிமை உண்டு என்பது சர்வதேச அளவிலான விதிமுறை. அந்த வகையில் காவிரியில் Riparian State என்ற வகையில் தமிழ்நாட்டின் உரிமையே அதிகம். அதை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் உள்ளது. ஆனால், அரசியல் வெள்ளத்தால் காவிரிக் கரை விவசாயம் பாழாவதும், இயற்கையின் கருணையால் மழை பெய்து கர்நாடக அணைகள் நிரம்பும்போது வேறு வழியின்றி, தமிழ்நாட்டில் தண்ணீர் பாய்ந்து டெல்டா மாவட்டங்களில் சாகுபடி நடப்பதும் தொடர் சாபம் போல ஆகிவிட்டது.