எந்த பதிலும் சொல்லாமல் கட்சி வேலைகளை மீண்டும் முடுக்கி விட்டிருக்கும் விஜயை நெருக்க சிபிஐக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது பாஜக .
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி அன்று இரவு நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்தது. வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சிறப்பு விசாரணைக்குழுவுக்கு எதிராக தவெக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த சிறப்பு குழுவின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சிபிஐ இந்த சம்பவத்தை விசாரிக்க உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி எஸ்.ஐ.டி குழுவின் விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. 1316 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கைகள் மற்றும் வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்தனர். இதன்பின்னர் சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் விசாரணை நடத்தினர். கடந்த 17ம் தேதி அன்று இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ.
அடுத்த கட்டமாக இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று சிபிஐ விசாரணை நடத்தியது. ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில், பிரச்சார பேருந்தில் இருந்த சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் கேட்டிருப்பதாகவும், அவற்றை இரு தினங்களில் நேரில் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நிர்மல்குமார்.
தமிழ்நாடு அரசு அமைத்திருந்த சிறப்பு குழுவிடம் அளித்த ஆவணங்களைத்தான் சிபிஐ வசமும் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சிபிஐ இதுவரையிலும் யாருக்கும் சம்மன் அனுப்பவில்லை என்றும், சம்மன் அனுப்பினால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்போம் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். பிரச்சார பேருந்தில் விஜயுடன் ஆதவ் அர்ஜூனாவும் இருந்தார். விஜய் மேனேஜர் ஜெகதீசும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சார பேருந்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஆகவே, இந்த பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கேட்டிருக்கிறது சிபிஐ.

சிபிஐ விசாரணை என்று உத்தரவு வந்தபோதே, அதிலும் அந்த சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஒரு குழு என்று உத்தரவு வந்தபோது, இது விஜயை சிக்க வைக்கும் பாஜகவின் வேலைதான். கூட்டணிக்கு வரச்சொல்லி நெருக்கடி கொடுக்கும் பாஜக. விஜய் அதற்கு சம்மதிக்கவில்லை என்றால் சிபிஐ, சிறப்பு குழு நெருக்கும் என்கிற கருத்துக்கள் பரவி வந்தன.
விஜய் கூட்டணிக்கு வருகிறார் என்கிற மாதிரிதான் எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார். பாஜகவினரும் பேசி வந்தனர். ஆனால் விஜய் தரப்பில் இருந்து எந்த தகவலுமே இல்லாததால், தவெகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை எடப்பாடி பழனிசாமி இப்போது சொல்வதை தவிர்த்து வருகிறார்.
அதற்கேற்றார் போல், கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் கட்சி பணியை தீவிரப்படுத்தும் விதமாக நிர்வாகிகள் நியமனத்தில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். அவரை தங்கள் வழிக்கு கொண்டு வரும் விதமாகத்தான் பாஜகவின் அழுத்தத்தில் விஜயை சிபிஐ நெருக்குகிறது.
