மத்திய அரசு அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இருப்பிட கண்காணிப்பை (Location tracking program) எப்போதும் இயக்கி வைக்க கட்டாயப்படுத்தும் திட்டத்தை மீண்டும் பரிசீலித்து வருவது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தொலைத்தொடர்பு துறை முன்மொழிந்த இந்த திட்டத்தை ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் எதிர்த்து வருகின்றன.
நிலையற்ற தனியுரிமை விவாதம்
அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் அரசு நடத்தும் சைபர் பாதுகாப்பு (Cyber security) செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மக்கள் எதிர்ப்பு காரணமாக அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதே சூழலில், இந்த இருப்பிட கண்காணிப்பு திட்டமும் கடுமையான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

GPS கருவியின் பயன்பாடும்- அரசின் விளக்கமும்
தற்போதைய சட்டகத்தின் கீழ், விசாரணை அமைப்புகள் பெறும் இருப்பிடத் தகவல் செல்லுலார் டவர் அடிப்படையிலானது. இந்த தரவு துல்லியமாக இல்லாததால், சந்தேக நபர்களின் தடங்களைத் துல்லியமாக கண்டுபிடிக்க சிரமம் ஏற்படுகிறது.

இதனை சரி செய்ய, தொலைத்தொடர்புத் துறை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் A-GPS (Assisted GPS) ஐ எப்போதும் இயங்க வைத்திருக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இது செயற்கைக்கோள் சிக்னல்கள் மற்றும் செல்லுலார் தரவு இணைந்து மிகத் துல்லியமான இருப்பிடத் தகவலை — ஒரு மீட்டர் அளவில் — வழங்கும். ஆனால் இந்த முறையில் பயனர்கள் Location Services-ஐ ஆஃப் செய்ய முடியாது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் கருத்து
இவ்வகையான சாதன-அடிப்படையிலான கட்டாய இருப்பிட கண்காணிப்பு உலகின் எந்த நாட்டிலும் தற்போது நடைமுறையில் இல்லை என்றும் இது சட்டம், தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் பெரிய பிரச்சனைகளை உருவாக்கும் என்றும் இந்த முயற்சி அபாயகரமானது என்றும் இது போன்களை முழுநேர கண்காணிப்பு சாதனங்களாக மாறச் செய்யும் என்றும் உலகின் பிரபல தனியுரிமை நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடனான கூட்டம் ஒத்திவைப்பு
இந்தியாவின் உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்கள் இந்த முன்மொழிவை இன்னும் ஆய்வு செய்து வருகின்றன. மேலும் எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் இத்திட்டம் குறித்து பேச அமைச்சகமும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் நடத்த இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆப்பிள், கூகுள் ஆகியவற்றின் இந்திய குழு எச்சரிக்கை
ICEA (ஆப்பிள், கூகுள் ஆகியவற்றின் இந்திய குழு) இந்த இருப்பிட கண்காணிப்பு இராணுவ அதிகாரிகள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், நிறுவன தலைவர்கள் போன்ற மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கக்கூடும் என்றும் அவர்கள் வைத்திருக்கும் முக்கிய தகவல்கள் வெளிப்படும் அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கின்றனர்.
