
செமிகண்டக்டர் நிறுவனத்திடம் கோடி கணக்கில் நன்கொடையாக பணத்தை பெற்றுக் கொண்ட பாஜக அரசு, ரூ.3,501 கோடி அந்நிறுவனத்திற்கு மானியமாக வழங்கியுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாலில் செமிகண்டக்டர் தொடர்பான நிறுவனத்திற்கு மானியம் வழங்கும் திட்டத்தை 2021, டிசம்பரில் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் CG Power என்னும் நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதம் மானியம் வழங்கி மத்திய அரசுக்கும் அந்நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு முன்னதாக அந்நிறுவனத்தின் மீதுள்ள வங்கி மோசடி மற்றும் அவர்கள் பாஜக-விற்கு அளித்த நன்கொடை போன்ற விவரங்களை கால வரிசைப்படி காண்போம்.
Avantha குழுமத்திற்குச் சொந்தமான CG Power and Industrial Solutions நிறுவனதில் ரூ.2,435 கோடி வங்கி மோசடி நடந்திருப்பதாக 2019, ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. பிறகு இந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை முருகப்பா குழுமம் 2020, நவம்பர் மாதம் வாங்கியது. இதன் தொடர்ச்சியாக 2021, ஜூன் மாதம் CG Power மற்றும் அதன் முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, 2023, ஜனவரியில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
பிறகு, 2023, நவம்பரில் செமிகண்டக்டர் யூனிட் அமைக்க CG Power நிறுவனம் விண்ணப்பித்தது. இதனை ஏற்று குஜராத்தில் ரூ.7,600 கோடி செலவில் செமிகண்டக்டர் யூனிட் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதற்கிடையில் 2024, மார்ச் மாதம் ‘Namo Drone Didi’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு 1,000 ட்ரோன்கள் வழங்கப்பட்டது. இதில் 200 ட்ரோன்களை முருகப்பா குழுமத்தின் கோரமண்டல் நிறுவனம் வழங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, 2024, மார்ச் 11ம் தேதியன்று கோரமண்டல் நிறுவனம் Triumph தேர்தல் அறக்கட்டளைக்கு ரூ.25 கோடி நிதி வழங்கியது. அதே தேதியில் Triumph தேர்தல் அறக்கட்டளை பாஜக-விற்கு ரூ.25 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பிறகு இரண்டு நாட்கள் கழித்து குஜராத்தில் CG Power செமிகண்டக்டர் யூனிட் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
மீண்டும், 2024, மார்ச் 22ல் முருகப்பா குழுமம் Triumph தேர்தல் அறக்கட்டளைக்கு ரூ.105 கோடியை வழங்கியது. அன்றைய தேதியே Triumph தேர்தல் அறக்கட்டளை பாஜக-விற்கு ரூ.100 கோடியும் திமுக-விற்கு ரூ.5 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இறுதியாக கடந்த ஜனவரியில் CG Power semiconductor யூனிட்டிற்கு ரூ.3,501 கோடி மானியம் வழங்கி மத்திய அரசு மற்றும் CG Power நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் CG Power மற்றும் அதன் முன்னாள் அதிகாரிகள் மீதான வங்கி மோசடி வழக்கில் முக்கிய ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்யாத நிலையில், கடந்த பிப்ரவரியில் டெல்லி நீதிமன்றம் சிபிஐ-யை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட நிகழ்வுகளில் இருந்து செமிகண்டக்டர் நிறுவனத்திடம் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக பெற்றதும், அவர்களுக்கு அரசு மானியம் அளித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.