ஜூன் 9ம் தேதி ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு. அதுமட்டுமல்லாமல் என்.டி.ஏ. கூட்டணியில் அவர் கிங் மேக்கராகவும் மாறி இருக்கிறார்.
1970களில் அரசியல் வாழ்க்கையை தொடங்கி, 1995ம் ஆண்டில் 45வது வயதில் ஆந்திராவின் முதலமைச்சர் ஆனவர் சந்திரபாபு நாயுடு. 1995ல் இருந்து 1999 வரை முதல்வராக இருந்தவர், மீண்டும் 1999 முதல் 2004 வரை முதலமைச்சராக இருந்தவர் அடுத்து 2014 முதல் 2019 ஆண்டு காலம் வரை ஆந்திராவின் முதல்வராக இருந்தார்.
2004ம் ஆண்டில் தேசிய அரசியலில் கிங் மேக்கராக இருந்தார். 1996 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய முன்னணியில் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 1999 மக்களவை தேர்தலுக்கு பின்னர் தேசிய அரசியலில் சந்திரபாபு நாயுடுவின் முக்கியத்துவம் அதிகம் இருந்தது. தற்போது அவர் மீண்டும் கிங் மேக்கர் அவதாரம் எடுக்கிறார்.
ஆந்திர மாநிலத்திற்கு மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. ஆண்டு வந்த ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். கட்சிக்கு எதிராக பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகளுடன் இணைந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் களத்தில் இறங்கியது.
ஆந்திர மாநில சட்டசபை பெரும்பான்மைக்கு 88 இடங்கள் தேவைப்படும் நிலையில், தனிப்பெரும்பான்மையினையும் தாண்டியது தெலுங்கு தேசம். அதாவது தெலுங்கு தேசம் 127 தொகுதிகளிலும் , ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளதால் ஆட்சி அமைக்க யார் தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பாஜகவுக்கு இப்போது சந்திரபாபு நாயுடுவின் தயவு தேவையிருக்கிறது.
ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் 10 மக்களவைத் தொகுதிகளும், பீகாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் 14 மக்களவை தொகுதிகளும் பாஜக ஆட்சி அமைக்க அவசியமாகிறது.
பாஜக மீண்டும் ஒன்றிய அரசு அமைக்கும்போது சந்திரபாபு நாயுடுவின் தயவு வேண்டி இருப்பதால் அவர் கிங் மேக்கர் அவதாரம் எடுக்கிறார். பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பதன் மூலம் பாஜகவிடம் எதை வேண்டுமானாலும் கேட்டுப்பெறலாம் என்கிற நிலை இருக்கிறது சந்திரபாபு நாயுடுவுக்கு. ஒன்றிய அமைச்சரவையில் கூட இடம் கேட்க வாய்ப்பிருக்கிறது. இதனால்தான் கிங் மேக்கர் ஆகி இருக்கிறார் சந்திரபாபு நாயுடு.