சீன ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று, 50 ஆண்டுகளுக்கு சார்ஜ் செய்யாமல் நாணயம் அளவிலான சிறிய அணுசக்தி பேட்டரியை உருவாக்கி சாதித்துள்ளது.
சீன தலைநகரமான பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட Betavolt என்கிற நிறுவனம், கடந்த ஜனவரி 8-ம் தேதி இந்த புதிய அணுசக்தி பேட்டரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்னும் வளர்ச்சி கட்டத்தில் இருக்கும் இந்த சிறிய அளவிலான பேட்டரி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போனை இயக்கக் கூடிய ஆற்றலை கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக Betavolt நிறுவனம் கூறுகிறது.
ஸ்மார்ட்போன் பேட்டரிகளை இயக்குவதில் அணு ஆற்றலைப் பயன்படுத்துவது ஸ்மார்ட்போன் உற்பத்தித் துறையில் கேம்-சேஞ்சராக இருக்கும், என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
BV100 என பெயரிடப்பட்ட அணு ஆற்றல் பேட்டரியை அறிமுகப்படுத்திய Betavolt, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களை முந்தி சீனா இதை உருவாக்கி சாதித்துள்ளதாக கூறியுள்ளது.
Nickel (Ni-63) கதிரியக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தி இந்த பேட்டரி செயல்படும் என Betavolt நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழக்கமான லித்தியம் பேட்டரிகளை விட 10 மடங்கு அதிக ஆற்றல் அடர்த்தியை இந்த பேட்டரி கொண்டிருப்பதாகவும் 3300 மெகாவாட் மணிநேரம் வரையிலான ஆற்றலை இந்த பேட்டரியால் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அணுசக்தி பேட்டரியைப் பயன்படுத்துவது ஆபத்தானதாகத் தோன்றினாலும், பேட்டரி “முற்றிலும் பாதுகாப்பானது” என்று நிறுவனம் கூறுகிறது.
மேலும் மருத்துவமனைகளில் செயற்கை இதய சிகிச்சையின்போது கூட இந்த வகையான பேட்டரி பயன்படும் என்றும், Betavolt நிறுவனம் கூறியுள்ளது.
நீண்டகால பயன்பாட்டிற்குப் பிறகு, இந்த கதிரியக்க பேட்டரியில் உள்ள ஐசோடோப்புகள் நிலையானதாகவும், கதிரியக்கமற்ற பொருளாக மாறும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு எந்தவித அச்சுறுத்தாலோ அல்லது மாசுபாட்டையோ ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by அசோக் முருகன்