
தகவல் தொழில்நுட்பத்தின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு அதன் பாய்ச்சலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. AI மூலம் படங்கள், வீடியோக்கள் உருவாக்கத் தொடங்கிப் பிரபலமான பாடகர்களின் குரலில் பாடல் வரை வந்த வண்ணம் உள்ளது.
அந்த டிரெண்டிங் வரிசையில் தற்போது இணைந்திருப்பதுதான் ‘ஸ்டூடியோ ஜிப்லி’ எனப்படும் அனிமேஷன் படங்கள். தனி நபர்களில் தொடங்கிய இந்த டிரெண்ட் இந்தியப் பிரதமர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் என அனைவரையும் ஆட்கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 15 புகைப்படங்கள் ஜிப்லி படங்களாக மாற்றப்பட்டு ‘My Gov India’ தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ’மறக்கமுடியாத சில தருணங்கள்’ என சில ஜிப்லி படங்கள் அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திமுக ஐடி விங் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தொடர்பான படத்தை ஜிப்லி அனிமேஷனாக பதிவிட்டுள்ளது.
ஜிப்லி படங்கள் என்றால் என்ன?
ஹயாவ் மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா என்பவர்களால் 1985ம் ஆண்டு ஜப்பானில் ‘ஸ்டூடியோ ஜிப்லி’ என்ற பெயரில் அனிமேஷன் படங்களுக்கான தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. இப்படங்கள் ஜப்பான் மக்களின் உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் விதத்திலும் கற்பனை கலந்தும் அமைந்திருந்ததால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த ஜிப்லி படங்கள் அனிமேஷன் திரைப்படங்களில் மட்டுமின்றி விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Chat GPT – Ghibli:
பல ஆண்டுகளாக உள்ள ஜிப்லி அனிமேஷன் தற்போது டிரெண்ட் ஆக Chat GPT தான் காரணம். Chat GPT-யில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒருவர் தனது டிஜிட்டல் புகைப்படத்தைப் பதிவிட்டு அனிமேஷன் படமாக நொடிப் பொழுதில் மாற்றிக் கொள்ளலாம். இந்த அப்டேட்டை தொடர்ந்து பலரும் ஜிப்லி அனிமேஷன் படங்களாக தங்களது புகைப்படங்களை மாற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.
ஜிப்லி அனிமேஷன் டிரெண்ட் ஆனதைத் தொடர்ந்து, ”இதனைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், கிராஃபிக்ஸ் கார்டு அதிக சூடாகி உருகும் நிலையில் உள்ளன. எனவே இந்த செயல்பாட்டை இன்னும் மேம்பட்ட வகையில் மாற்றும் வரை சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த உள்ளோம்” என Chat GPT (Open AI) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தனது இலவச பயனர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 படங்களை மட்டுமே மாற்றும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இக்கட்டுப்பாட்டை மீறிப் பயன்படுத்தக் கட்டணம் செலுத்த வேண்டும்.
அறிவுசார் சொத்துரிமை:
ஜிப்லி டிரெண்ட்-ஆன அதே வேகத்தில் ஹயாவ் மியாசாகி செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசிய பழைய வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் பலர் பகிரத் தொடங்கினர்.
அதில் அவர், “மனிதர்களின் உண்மையான உணர்வுகளைச் செயற்கை நுண்ணறிவால் புரிந்துகொள்ள முடியாது. இத்தொழில்நுட்பத்தை என்னுடைய பணியில் ஒருபோதும் நான் பயன்படுத்த விரும்பமாட்டேன். அது மனித வாழ்க்கைக்கே அவமானமானது” எனக் கூறியுள்ளார்.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் குரலில் பாடல்கள் உருவாக்குவது முதற் கொண்டு கலை சார்ந்த படைப்புகள் வரும் போதெல்லாம் தனிநபர் உரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்ற விஷயங்களும் விவாதிக்கப்படுவதுண்டு. அந்தவகையில் ஹயாவ் மியாசாகி வீடியோவை பகிர்பவர்களும் இது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சாம் ஆல்ட்மனின் AI நிறுவனம் தங்களது படைப்புகளை அனுமதியின்றி பயன்படுத்துவதாக நிறுவனங்களும் கலைஞர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இந்நிறுவனம் இது தொடர்பாக பல்வேறு வழக்குகளையும் எதிர் கொண்டு வருகிறது.
இப்படி AI மூலம் உருவாக்கப்பட்ட படைப்புகள், யாருக்குச் சொந்தம் என்பது குறித்த தெளிவான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் தேவையென சாம் ஆல்ட்மன் வலியுறுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கலைஞரின் படைப்புகளிலிருந்து தரவுகளை எடுத்துக் கொண்டு, அதனை வேறொரு படத்தில் பயன்படுத்தி ஜிப்லி மாதிரியான படங்களை AI உருவாக்குகிறது.
ஹயாவ் மியாசாகி உருவாக்கிய கதாபாத்திரங்களை AI அப்படியே உருவாக்கினால் அது அறிவுசார் சொத்துரிமையின் கீழ் குற்றமாகக் கருதப்படும். இதுவே, தரவுகளை மட்டும் பயன்படுத்தி நமது படங்களை ஜிப்லி மாதிரியான படமாக மாற்றித் தருவது அறிவுசார் சொத்துரிமையின் கீழ் குற்றமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
இவ்வாறு தரவுகளைக் கையாள்வதற்காக அந்த கலைஞருக்கு ஏதேனும் பணமோ லாபத்தில் பங்கோ வழங்கப்படுவதில்லை என்பதுதான் தற்போது கவனிக்க வேண்டியுள்ளது. Chat GPT மாதிரியான AI நிறுவனங்கள் பலவும் கலைஞர்களின் படைப்புகளிலிருந்து தரவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, இது அறிவுசார் சொத்துரிமையின் கீழ் வராது எனச் சட்டத்தில் உள்ள போதாமையைக் காரணம் காட்டி பணம் பார்த்து வருகின்றனர். சட்டத்தைத் தாண்டி ஒரு கலைஞனுக்கான தார்மீக உரிமை என சில உள்ளன. அதனையும் இந்நிறுவனங்கள் எண்ணத்தில் கொள்ள வேண்டும்.
pq6iua