
Representative Image
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடியின் பேராசிரியர்கள் ஸ்மார்ட் வெடிகுண்டுகளை தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் ஸ்மார்ட் வெடிகுண்டுகளை வடிவமைக்க உள்ளனர்.
இந்திய அளவில் ஸ்மார்ட் வெடிகுண்டுகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி இதுவாகும். இந்த வகை வெடிகுண்டுகளை பீரங்கிகளில் பயன்படுத்த இயலும் என கூறப்படுகிறது.
இந்த முயற்சியில் இணைந்துள்ள ‘மியூனிஷன்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவின் முப்படைகளுக்கும் துணை ராணுவப் படைக்கும் தேவையான பல்வேறு வெடிபொருள்களை தயாரிப்பதுடன் ஆராய்ச்சி, மேம்பாடு, தொழில்நுட்பம், வணிகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
தற்போது பயன்படுத்தி வரும் பீரங்கிகள் மூலம் சுமார் 8 முதல் 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் குறிவைத்தால் அவை 500 மீட்டர் பிழையோடு தாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த பிழை தூரத்தைக் குறைக்கவே ஸ்மார்ட் வெடிகுண்டுகள் பயன்படுகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே இத்தகைய குண்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
சரியான இலக்கைச் சென்றடைவதற்கு ஸ்மார்ட் வெடிகுண்டுகள் டிஜிட்டல் சமிஞ்சைகளை (சிக்னல்களை) பயன்படுத்தும் என கூறப்படுகிறது.
இத்தகைய ஸ்மார்ட் வெடிகுண்டுகளை தயாரிக்கும் முயற்சியில் மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் செயல்பட உள்ளனர்.