வேகமாக அதிகரித்து காற்று மாசுபாடு காரணமாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நகரங்களில் மனித உயிரிழப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் காற்று மாசுபாட்டின் காரணமாக முன்கூட்டியே உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொள்வதாக Science.org தளத்தில் வெளியான ஆய்வறிக்கை கூறியுள்ளது.
ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதியில் உள்ள பதினெட்டு நகரங்களில் காற்று மாசு வேகமாக அதிகரித்து வருகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, நைட்ரஜன் டை ஆக்சைடு(NO2), அம்மோனியா போன்ற நச்சுப் பொருட்கள் காற்றில் கலப்பதை கண்காணிப்பதற்கு, போதுமான நிதி இல்லாததால் ஆசிய நாடுகளுக்கு சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது.
காற்று மாசுபாட்டில் மிகவும் அபாயகரமான மாசுபடுத்தும் பொருள் PM2.5 என்கிற அளவில் உள்ள நுண்ணிய வேதிப்பொருள், நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவி மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டில் மட்டும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் காற்று மசுபாட்டால் உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 2018-ல் தெற்காசிய நகரங்களில் 126,000 முதல் 275,000 ஆகவும், தென்கிழக்கு ஆசிய நகரங்களில் 26,000 முதல் 80,000 ஆகவும் அதிகரித்துள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்கா மற்றும் இந்தியாவின் மும்பை மற்றும் பெங்களூரு ஆகியவை நீண்டகால காற்று மாசு வெளிப்பாட்டினால் ஏற்படும் ஆரம்பகால உயிரிழப்புகளில் அதிக உயர்வை கண்டுள்ளன.
வெப்பமண்டலப் பகுதியில் மட்டும் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் கண்டுபிடுப்புகள், வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் அதீத நகரமயமாக்கல் உள்ளிட்டவைகளால் காற்று மாசுபாடு கடுமையான உயர்வை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.
2005 மற்றும் 2018க்கு இடையில் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மூலம் சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தகவலின்படி, ஆசியாவின் 18 நகரங்களில் காற்று மாசு வேகமாக உயர்ந்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் அகமதாபாத், பெங்களூர், சென்னை, சிட்டகாங், டாக்கா, ஹைதராபாத், கராச்சி, கொல்கத்தா, மும்பை, புனே மற்றும் சூரத் மற்றும் பாங்காக், ஹனோய், ஹோ சி மின் நகரம், ஜகார்த்தா, மணிலா, புனோம் பென் மற்றும் யாங்கூன் ஆகிய நகரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனைத்து நகரங்களும் நைட்ரஜன் டை ஆக்சைடில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கண்டுள்ளன. இது மனிதர்களின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிப்பதாக ஆய்வு கூறுகிறது.
14 வருட காலப்பகுதியில், நைட்ரஜன் டை ஆக்சைடு(NO2) அளவு சிட்டகாங்கில் (வங்காளதேசம்) மூன்று மடங்காகவும், டாக்கா (வங்காளதேசம்) மற்றும் ஹனோயில் (வியட்நாம்) இரு மடங்காக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.