தமிழ்நாட்டில் எதை வைத்து அரசியல் செய்வது என்பது பா.ஜ.க.வுக்கும் அதன் ஆதரவு சக்திகளுக்கும் புரிபடாமலும் பிடிபடாமலும் இருக்கிறது. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, தமிழ்நாடு என்று சொல்லாமல் தமிழகம் என்றுதான் சொல்லவேண்டும் என்பது, இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்குவது, ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடுவது, சனாதனப் பெருமை பேசுவது என்று பா.ஜ.க.வும் அதன் ஆதரவு சக்திகளும் எடுக்கும் அஸ்திரங்கள் ஒவ்வொன்றும் முனை முறிந்து போய்விடுகின்றன. அ.தி.மு.க.வின் பலவீனத்தைப் பயன்படுத்தி, தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அரசியலைக் கையிலெடுப்பதில் மட்டும் ஓரளவு தேர்தல் வாக்குகளை அவற்றால் வாங்க முடிகிறது. சொந்தமாகத் தங்களை நிலைநாட்டிக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்துமே தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் எதிரானதாகவே உள்ளன.
திடீரென பிராமணர்களின் நலன் காக்கும் முன்னெடுப்பை, வழக்கம்போல தனது ஆதரவு சக்திகள் மூலமாக மேற்கொண்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி. பிராமணரல்லாதவரான அர்ஜூன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சி சார்பில்தான் இது முன்னெடுக்கப்பட்டது. பிராமணர் சங்கத்தினர் உள்பட பா.ஜ.க. ஆதரவு பிராமணர்கள், பா.ஜ.க. ஆதரவு அமைப்புகளின் பிராமணர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த முன்னெடுப்பில், தங்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளைவிட, திராவிட ஒவ்வாமையால் கக்கிய வார்த்தைகளே அதிகமாக இருந்தன. திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளாலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளாலும், குறிப்பாகத் தி.மு.க ஆட்சியினாலும் தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு கல்வி இல்லை, வேலை இல்லை, கஞ்சி குடிக்கக்கூட வழியில்லை என்கிற அளவிற்கு இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பா.ஜ.க. ஆதரவு நடிகை கஸ்தூரி பேசியதை, அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பா.ஜ.க. பிரமுகர்களும் ஆதரித்து வரவேற்றனர்.
எந்தவொரு புள்ளிவிவரமோ, காரணங்களோ இன்றி இதுபோல பேசுவது ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது மத்திய அரசில் பா.ஜ.க. இருப்பதால் இப்படிப் பேசுவதற்கான ஒருங்கிணைப்புகள் டெல்லி தொடங்கி கிண்டி ராஜ்பவன் வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது வரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரயில்வே உயரதிகாரிகள், தபால்துறை அதிகாரிகள் எனப் பல நிலைகளிலும் பிராமணர்களே மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதை அராசாங்க புள்ளிவிவரமே காட்டிவருகிறது.
திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் கட்சியான நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி இடஒதுக்கீட்டின்படி பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் அதனை எதிர்த்து பிராமணர்கள்தான் வழக்குத் தொடர்ந்தனர். உச்சநீதிமன்றம் அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. அதன்பிறகு, இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அந்தந்த மாநிலங்களில் உள்ள தேவைக்கேற்ப இடஒதுக்கீடு வழங்கும் முறை கொண்டுவரப்பட்டது. எனவே, தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்கு எதிராக சென்றவர்கள் பிராமணர்களே. காரணம், தங்களைப் போல மற்ற சமுதாயத்தினரும் கல்வி-வேலை வாய்ப்புகளில் சமத்துவம் பெறுவதை விரும்பாத காரணம்தான். இதை மறைத்துவிட்டு, அல்லது இது பற்றி அறியாமல் இன்று திராவிட இயக்கம் மீது வசைபாடுவது வரலாற்றுத் திரிபாகும்.
பிராமணர்களைப் பார்ப்பனர்கள் என்று தமிழ்நாட்டில் இழிவாகச் சொல்கிறார்கள் என்றும் இந்து மக்கள் கட்சி முன்னெடுத்த நிகழ்வில் குரல் ஒலித்தது. இதுபோல பட்டியல் இன மக்களின் சாதிப் பெயர்களை சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பி, அதனால் பிராமணர்களை வேறு பெயர்களில் சொன்னால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற அளவிற்கு இவர்களின் கோரிக்கை இருக்கிறது.
பார்ப்பனர் என்ற சொல் சங்க இலக்கியம் தொடங்கி, மகாகவி பாரதியார் பாடல் வரை தமிழ் மரபில் கடைப்பிடிக்கின்ற சொல். பிராமணர் என்பது வருணத்தைக் குறிக்கின்ற, பிரம்மனின் நெற்றியில் பிறந்தவர்கள் என்பதன் அடையாளமான வடமொழிச்சொல். பார்பபனர்-அந்தணர் என்பவை அவர்கள் செய்கின்ற தொழில் அல்லது கடைப்பிடிக்கின்ற முறையைக் குறித்த தமிழ்ச்சொல்.
பட்டியல் இன மக்கள் பொதுத் தெருவில் நடக்கக்கூடாது, பொதுக்கிணற்றில் நடக்கக்கூடாது, கோவிலின் இந்தப் பகுதிக்கு மேல் செல்லக்கூடாது என்று தடைவிதித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்த காலத்தில், ரயில்வே நிலைய உணவகங்களில், ‘பிராமணர்கள் சாப்பிடும் இடம்’ என்று தனி இடஒதுக்கீட்டை அறிவிக்கும் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பிராமணாள் கபே என்ற பெயரில் ஹோட்டல்கள் நடத்தப்பட்டன. தங்கும் விடுதிகளில் பிராமணர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன. சூத்திரர்கள் எனப்பட்டவர்களும் பஞ்சமர்கள் எனப்பட்டவர்களும் பல இடங்களிலும் அனுமதிக்க மறுக்கப்பட்டனர்.
பட்டியல் இன மக்களின் சாதிப் பெயரையும் பார்ப்பனர் என்ற சொல்லையும் ஒப்பிட்டுப் பேசுவது வெறும் வார்த்தை விளையாட்டு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருதரப்பின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும், சமூக நீதிக் கொள்கை நிலைநாட்டப்பட்ட பிறகு அது எப்படி மாறியிருக்கிறது என்பதுமே கவனத்திற்குரியது. பிறப்பால் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற மனநிலை மாறாதவரை ஆரிய-திராவிட கருத்து மோதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.