காலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த இரவு நேர வீடியோவைப் பார்த்தவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பெண்கள் பயணிக்கும் கார் ஒன்றை மறித்து நிற்கிறது இன்னொரு கார். அதிலிருந்த இறங்கி, மூர்க்கத்தனமாக ஓடிவரும் இளைஞர்கள், காரில் உள்ள பெண்களை மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள். இவையனைத்தும் வீடியோவாகப் பதிவு செய்யப்படுகிறது. மறித்து நிற்கும் காரில் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் கொடி கட்டப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோ வெளியாகி, தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பான நிலையில், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, மற்ற கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகக் குற்றம்சாட்டினர். பெண்கள் ஓட்டி வந்த கார், அந்த முரட்டு இளைஞர்களின் கார் மீது மோதியதாக புகார் வந்ததாகவும், பின்னர் விசாரித்ததில் அப்படி எதுவும் மோதவில்லை என்றும், கார்களை கைப்பற்றியுள்ள நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆளுங்கட்சிக் கொடியைக் கட்டிக்கொண்டு சென்றால், அது இதுபோன்ற தவறுகளுக்கு அங்கீகாரமளிக்கும் லைசென்ஸா என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. கொடியுடன் காரில் வந்து பெண்களைப் பின்தொடர்ந்த- அவர்களை மிரட்டிய இளைஞர்கள் மீது பெண்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் புதிய சட்டம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்க்கட்சிகள் கேட்டன.
இந்த விவகாரத்தில் போலீசாரின் தனிப்படையால் தேடிக் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற இளைஞர் அ.தி.மு.க. குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவர் என்ற தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது. சந்துரு எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அவருடன் காரில் வந்த நண்பர்களும் எந்தக் கட்சியிலும் இல்லை. ஏற்கனவே ஒரு சில புகார்களுக்குள்ளாகி வழக்குகளை சந்தித்த சந்துருவுடன் அவருடைய நண்பர், தான் வாங்கியுள்ள காரில் மற்ற நண்பர்களுடன் சென்றிருக்கிறார். அப்போதுதான், காரை இடித்ததாகச் சொல்லி, பெண்கள் பயணித்த காரை மறித்து தகராறு நடந்திருக்கிறது.
காரில் இருந்த யாரும் எந்தக் கட்சியிலும் இல்லை. முதன்மைக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபரின் குடும்பத்தினர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அப்புறம் எப்படி காரில் ஆளுங்கட்சியான தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டிருக்கும் சந்துருவே அதற்கான காரணத்தை விளக்க, அது வீடியோவாகவும் வெளியாகியுள்ளது. “கார் வாங்கிய சந்தோஷ், அடுத்த மாதம் கொடைக்கானல் போகலாம் என்று சொன்னதாகவும், டோல்கேட்டுகளை ஃப்ரீயாகக் கடப்பதற்காக தி.மு.க. கொடியைப் போட்டுக்கொள்ளலாம் என்றும், கொடைக்கானல் டிரிப் முடிந்ததும் கொடியை கழட்டிவிடலாம் என்றும் சொன்னதாக சந்துரு சொல்கிறார்.
ஆளுங்கட்சியின் கொடியைப் போட்டால் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க மாட்டார்களா? சுங்கச்சாவடி விதிமுறைகள்படி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வாகனங்கள், பிரதமர், முதலமைச்சர், மத்திய-மாநில அமைச்சர்கள், அரசுப் பணியில் உள்ள வாகனங்கள், உச்சநீதிமன்ற-உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவர்களின் வாகனங்களுக்குத்தான் கட்டணம் கிடையாது என்றிருக்கிறதே தவிர, ஆளுங்கட்சி உள்பட எந்தக் கட்சியின் கொடி போட்ட கார்களுக்கும் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுவதாக விதிமுறைகள் இல்லை. ஆனாலும், ஆளுங்கட்சியின் கொடியையோ, ஆளுங்கட்சியாக இருந்த கட்சியின் கொடியையோ, அந்தந்தப் பகுதியில் செல்வாக்குள்ள சாதிக்கட்சிகளின் கொடிகளையோ காரில் போட்டுக்கொண்டால் டோல்கேட்டை கட்டணமின்றி கடந்து விடலாம் என்ற மனநிலை பலருக்கு இருக்கிறது.
எந்தக் கட்சியின் மாநாடாக இருந்தாலும் அது நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை. வாகனங்களின் நெரிசலைத் தவிர்க்க இந்த நடைமுறைக் கடைப்பிடிக்கப்பட்டாலும், மீறி வசூலிக்கப்பட்டால் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கப்பட்டு, சுங்கம் வசூலிக்கும் கவுண்ட்டரின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்ட நிகழ்வுகளைத் தமிழ்நாடு பார்த்திருக்கிறது. பிற மாநிலங்கள் பலவற்றிலும் இதே நிலைமைதான்.
வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என காரில் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பவர்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதைத் தங்களுக்கு நேரும் கௌரவக் குறைவாக கருதுகிறார்கள். அதனால், இலவச அனுமதியை எதிர்பார்க்கிறார்கள். அதற்காக வாதிடுகிறார்கள். மத்திய-மாநில ஆளுங்கட்சிகளின் கொடி போட்ட காரில் பயணிக்கும் பிரமுகர்கள் என்றால் சுங்கச்சாவடியில் இருககின்ற ஊழியர்கள் கொஞ்சம் தளர்வாகவே நடந்து கொள்வதும் உண்டு. அதனால்தான் அ.தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர் பயணித்த காரில், தி.மு.க. கொடி கட்டப்பட்டிருக்கிறது. இந்நேரம், அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து, காரில் தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர் பயணித்திருந்தால் அ.தி.மு.க. கொடி போடப்பட்டிருக்கும்.
தவறுகள், விதிமீறல்கள், குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொடியைப் பயன்படுத்தும் கலாச்சாரம் ஆபத்தானது. ஈ.சி.ஆர். சம்பவம் சொல்லும் உண்மைகளையும், இன்னும் கண்டறிய வேண்டியவற்றையும் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன், கொடிகளுக்குத் தனிச்சலுகை இல்லை என்பதை நடைமுறைப்படுத்தி, அதைப் பயன்படுத்தி தவறு செய்பவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.