சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் உள்ளாட்சி நிர்வாகத்தால் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியைக் கண்டித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் கண்டனம் தெரிவித்து மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் 6% சொத்து வரி உயர்வு என்பதைக் கண்டித்துதான் இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்க்கட்சி நடத்தியுள்ளது. தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு மின்கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டிருப்பதும் அதன் சுமையை மக்கள் எதிர்கொள்வதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. அரசோ, இதற்கு காரணம் தங்கள் ஆட்சியல்ல என்று விரிவான விளக்கம் தந்துள்ளது. 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி 50% முதல் 100% வரை உயர்த்தப்பட்டது. தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையிலும், எதிர்க்கட்சியான தி.மு.கவினர் மாவட்டத் தலைநகரங்களில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
2011க்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், நீதிமன்றங்கள் கண்டித்த நிலையில், 2019ஆம் ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்த முன்வந்தது. தேர்தலைக் கருத்தில் கொண்டு சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற்றது. எனினும், இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். ஏன் அவர் இவ்வாறு சொன்னார்?
மொத்த மாநில உற்பத்தி வளர்ச்சிக்கேற்ப (GSDP), சொத்து வரியை உயர்த்த வண்டும் என்பது 15வது நிதிக்குழுவின் பரிந்துரை. மத்திய அரசிடமிருந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களை பெற வேண்டுமெனில் சொத்து வரியை உயர்த்த வேண்டும். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயித்து சொத்து வரி வசூலில் வளர்ச்சியைக் காட்ட வேண்டும். உள்ளாட்சிகளின் நிதிப்பற்றாக்குறையை சரி செய்ய சொத்து வரியை உயர்த்துவதுதான் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை” என்பது மத்திய அரசின் நிதிக்குழுவின் முடிவு. இதனை அப்போதைய அ.தி.மு.க அரசு ஏற்றுக்கொண்டு விட்டது. அதனால்தான், அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர், சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றார்.
அ.தி.மு.க ஆட்சியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும்தான் நடந்தது. அதில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வென்றதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வரவில்லை. தி.மு.க ஆட்சியில்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. மத்திய அரசின் நிதிக்குழு பரிந்துரைக்கு மாநில அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தபடி, சொத்து வரி உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுதான் தி.மு.க அரசு தரப்பின் விளக்கம்.
உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரத்திற்காக ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வுக்கு அப்போது ஒப்புக்கொண்ட அ.தி.மு.க. இப்போது போராட்டம் நடத்துவது ஏன் என்றும், தி.மு.க அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிப்பவர்கள், இந்த வரிவிதிப்புக்கு காரணமான மத்திய பா.ஜ.க அரசை ஏன் கண்டிக்கவில்லை என்று தி.மு.க தரப்பு கேட்கிறது. மாறி மாறி கேள்விகளும் கண்டனங்களும் வெளிப்பட்டாலும் சொத்து வரி விதிப்பால் பாதிக்கப்படுபவர்கள் மக்கள்தான்.
குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சரியாக செயல்படுத்தி, மக்கள்தொகையைக் குறைத்த மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, நிதி ஆதாரத்தையும் குறைத்தது மத்திய அரசு. வளர்ச்சி பெற்ற மாநிலம் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டையும் குறைத்து, சொத்து வரியையும் மின் கட்டணத்தையும் பிற கட்டணங்களையும் மீண்டும் மீண்டும் உயர்த்தச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதும் மத்திய அரசுதான். மத்திய அரசு முன்வைக்கும் திட்டங்களை சரியாக செயல்படுத்திய மாநிலங்கள் தொடர்ந்து தண்டனையை அனுபவிக்கின்றன.
அதிகாரக் குவிப்பு அரசியலின் இத்தகைய மோசமான நிலை எளிய மக்களுக்கு முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. ஆள்வது தி.மு.கவோ, அ.தி.மு.க.வோ அவைதான் மக்களின் கோபத்தை எதிர்கொண்டாக வேண்டும். சொத்து வரி உயர்வு எனும் விபரீத விளையாட்டில் அ.தி.மு.க தனது தேர்தல் தோல்வியின் மூலம் தப்பிவிட்டது. தி.மு.க. தேர்தல் வெற்றி மூலம் சிக்கிக் கொண்டது. மத்திய அரசின் வலையில் தமிழ்நாடு மொத்தமாக சிக்கியிருக்கிறது. சுமைதாங்கியாக மக்கள்.