
சென்னையின் வெள்ளை மாளிகை எனப்படும் ரிப்பன் பில்டிங்கை பஸ், கார், டூவீலர்களில் கடந்து செல்லும் பொதுமக்கள் அங்கே பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதையும், அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதையும் கேட்டபடியே கடக்கிறார்கள். எதற்காக இவர்கள் முதலமைச்சரை விமர்சிக்கிறார்கள், அவர்தான் எல்லாருக்கும் எல்லாம் என்ற முறையில் ஆட்சி நடத்துகிறாரே என்று யோசித்தபடியே செல்கிறார்கள்.
பிரதமரையும் முதலமைச்சரையும் நாட்டின் கடைக்கோடி மனிதர்களும் விமர்சிக்க முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சிறப்பம்சம். ஆனால், சென்னை மாநகராட்சி அலுவலகம் இயங்குகிற ரிப்பன் மாளிகை முன்பாக எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும் முதலமைச்சருக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. ஆனாலும், சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் ஒரு வார காலத்திற்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் முதலமைச்சரை நோக்கி தங்கள் விமர்சனத்தை வைக்கிறார்கள். அதை எதிர்க்கட்சிகள், புதுக்கட்சிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் குப்பைகளை அள்ளும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவிருப்பதால், அந்த மண்டலத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் தாங்கள் பெற்று வரும் ஊதியத்தில் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும், தங்களின் பணிப் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்றும் தெரிவித்து, அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்திலும் வேலைவாய்ப்பிலும் விளிம்பு நிலையில் உள்ளவர்களான தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை கவனித்து உரிய தீர்வு காண வேண்டிய முக்கிய பொறுப்பு, மாநகராட்சி நிர்வாகத்திற்கே உரியது.
புகழ்பெற்றதும் பழம் பெருமை வாய்ந்ததுமான சென்னை மாநகராட்சிக்கு ஒரு பெண் மேயர் அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் மேயர் முதன்முறையாக கிடைத்திருக்கிறார். அவருடன், மாநகராட்சி ஆணையரும் மற்ற அதிகாரிகளும் சேர்ந்த இந்தப் பிரச்சினை குறித்து பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்பதால், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரையும் உள்ளடக்கி 12 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் போராட்டம் முடிவுக்கு வராதது கெடுவாய்ப்பாகும்.
200 வார்டுகளைக் கொண்டதாக சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட 2011ஆம் ஆண்டிலேயே பெரும்பாலான மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் குப்பை அள்ளும் பணிக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சுயஉதவிக்குழுக்கள் மூலம் மாநகராட்சி சார்பில் வேலை செய்த தூய்மைப் பணியாளர்கள், பின்னர் இந்த தனியார் நிறுவனங்களின் பணியாளர்களாக்கப்பட்டனர். கடந்த ஆட்சியில் உள்ள நடைமுறை தற்போது இராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களுக்கு விரிவாக்கப்படும் நிலையில்தான் அதனை ஏற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தூய்மைப் பணியாளர்கள். இதனால் அந்த மண்டலங்களில் குப்பை அள்ளுவது உள்ளிட்ட தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையின் இதயப் பகுதியான சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பிரம்மாண்டமாக எழுந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு நடைபெறும் போராட்டம் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளான நிலையில், இந்தப் போராட்டத்தில் அரசியல் ரீதியான இலாப நோக்கில் பங்கேற்கும் எதிர்க்கட்சிகள், தூய்மைப் பணியாளர்களுக்காக பாடுபடும் பொதுநல அமைப்புகள், சாதிய கண்ணோட்டத்தில் இதனைக் கையாளும் நிறுவனங்கள் ஆகியவை தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தருகிறோம் என்ற பெயரில் அரசின் மீதான விமர்சனத்தை வைக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமைக்குரியவர். 1996ல் முதல் முறையும், 2001ல் இரண்டாவது முறையும் அவரைத்தான் சென்னை மக்கள் மேயராகத் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு காரணம், 1996 முதல் 2001 வரையிலான அவருடைய மேயர் பதவிக்காலத்தில் சிங்காரச் சென்னை என்ற முழக்கத்துடன் 21ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப சென்னையின் முகத்தையும் முகவரியையும் அவர் மாற்றிக் காட்டியதுதான். 2001ல் தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சர் ஜெயலலிதா, அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக மு.க.ஸ்டாலினின் மேயர் பதவியைப் பறிப்பதற்காகவே சட்டமன்றத்தில் தனி சட்டம் கொண்டு வந்த நிறைவேற்றினார். எனினும், மக்கள் மனதில் மேயர் என்றால் அது மு.க.ஸ்டாலின்தான் என்பது நிலைப்பெற்றது.
மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோதுதான் நவீன முறையில் சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஓனிக்ஸ் என்ற நிறுவனம் மூலம் அது செயல்படுத்தப்பட்டபோது, அப்போதைய தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்து அச்சம் கொண்டார்கள். மேயர் மு.க.ஸ்டாலினே முன்னின்று அவர்களின் கவலையைப் போக்கி, பணியினைத் தொடரச் செய்தார். தற்போது அவர் முதலமைச்சராக இருக்கிறார். அவர் மேயராக இருந்த சென்னை மாநகராட்சியில் மீண்டும் தூய்மைப் பணியாளர் பிரச்சினை உருவாகியுள்ளது.
அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டம்தான் கூடுதலாக இரண்டு மண்டலங்களில் நடைமுறைக்கு வருகிறது என்ற நிலையில், தூய்மைப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் முழுமையாக விளக்கி, நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் அளிக்கப்படும் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்த உறுதியை அரசு தரப்பில் அளித்து, விரைவில் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டியது கட்டாயமாகும்.
சென்னையின் இதயப் பகுதியில் தொடர் போராட்டம் என்பது பொதுமக்களிடம் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குவதுடன், அரசியல் களத்திலும் இது அரசுக்கு நெருக்கடியையே உருவாக்கும்.