கடந்த ஜனவரி 11-ம் தேதி சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
சுமார் 170 கோடி திட்ட மதிப்பீட்டில் 12 மீட்டர் நீளம், தாழ்தளம் மற்றும் குளிரூட்டப்பட்ட 100 பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெர்மன் கடன் வழங்கும் நிறுவனமான Kreditanstalt für Wiederaufbau-வின் நிதியுதவியுடன் இந்த பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு இணைந்து செயல்படுகிறது.
இந்த சூழலில், வருகிற ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக சென்னையில் மின்சார பேருந்துகள் இயங்கத் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் மூலம் இயக்கப்பட உள்ள இந்த பேருந்துகளின் இயக்கம் மற்றும் பராமரிப்புக்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. பல்லவன் சாலையிலுள்ள சென்ட்ரல் பணிமனை மற்றும் அடையாறு பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பல்லவன் சாலை மற்றும் அடையாறு பேருந்து பணிமனைகளில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டுள்ளது.
பேருந்தில் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் மூலம் ரூட்-மேப்பிங் செய்வதற்கான ஆன்-பஸ் இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம், தானியங்கி பேருந்து நிறுத்த அறிவிப்புகள் மற்றும் இருவழி குரல் தொடர்பு, சிசிடிவி கேமராக்கள், டிரைவரின் இருக்கை அருகே பொருத்தப்பட்ட மைக்ரோஃபோன், காட்சித் திரை மற்றும் LED விளக்குகள் ஆகிய வசதிகள் இந்த பேருந்துகளில் இருக்கும்.
அனைத்துப் பேருந்துகளிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டு மூலம் வழிகளைக் காண்பிக்கும் வசதியும் இருக்கும் என கூறப்படுகிறது.
News Source: The Hindu