உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என்று பெயர் பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்வு உலக சாதனையாகப் பதிவாகியிருக்கிறது. ஏறத்தாழ 15 இலட்சம் பேருக்கு மேல் திரண்டு இந்த சாகசங்களைப் பார்வையிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எந்த திருவிழாவிற்கோ, கட்சி மாநாடுகளுக்கோ இந்த அளவில் கூட்டம் வந்ததில்லை என்று மக்கள் ஆர்வமாக வந்து, ஆரவாரம் செய்து விமானப் படையின் அசாத்தியமான சாகசங்களை ரசித்தனர்.
முப்படையில் எந்தப் படையாக இருந்தாலும் அது எதிரி நாட்டின் தாக்குதலைத் தகர்த்து சொந்த நாட்டு மக்களின் உயிரைக் காப்பதையே முதன்மையானக் கடமையாகக் கொண்டிருக்கும். மாறாக, இந்திய விமானப்படையின் சாகசத்தைப் பார்க்க வந்த இலட்சக்கணக்கான இந்தியர்களில் 5 பேர் பலியானது கெடுவாய்ப்பாக அமைந்துவிட்டது. விமானப்படை சாகசத்திற்கான ஒத்திகை கடந்த வாரத்தில் நடந்தபோதே மெரினா கடற்கரையை ஒட்டிய பகுதிகள் கண்காணிப்புக்கு உட்பட்டவையாக மாறி, போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அருகில் உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அப்போதே, இந்திய விமானப் படை அதிகாரிகளும், தமிழ்நாடு அரசும் இணைந்து சாகச நாளில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தெளிவாகத் திட்டமிட்டிருக்கலாம்.
கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை ஆதரிப்பதும், படையினரின் சாகசங்களைப் பார்ப்பதும் ‘தேசபக்தி’யின் அடையாளமாக மாற்றப்பட்டுள்ள நாட்டில், இலட்சக்கணக்கானவர்கள் திரண்டிட வேண்டும் என எதிர்பார்த்து அதற்கேற்ற அறிவிப்புகளை ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்ட விமானப்படையினர், சென்னை போன்ற பல்வேறு மக்கள் வாழும் மாநகரத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்காறுகளைப் பற்றி யோசித்து, படையினருக்கே உரிய கட்டுப்பாட்டுடன் மேற்கொண்டிருக்கலாம். மக்களிடம் கடுமை காட்டவேண்டாம் என்ற மனநிலையில், குடை-தண்ணீர்-கறுப்புக் கண்ணாடிகள் போன்றவற்றை எடுத்துவர வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆர்வப்பெருக்குடன் குடும்பம் குடும்பாக வந்த மக்கள், பொருட்காட்சியை பார்க்க வருவது போலத்தான் வந்தனர். குடை-தண்ணீர் கொண்டு வந்தவர்கள் குறைவுதான். வழியில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
காலை 11 மணி முதல் 1 மணிவரை விமான சாகசங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் காலை 7 மணி முதலே கூட்டம் தொடங்கிவிட்டது. சாகசம் முடிந்து வெளியேறுவதற்கு மாலை 4 மணிக்கு மேல் ஆகிவிட்டது. வெயில் நேரத்தில் கடலோரமாக நின்றவர்களின் கடற்கரை தாகத்திற்கு கையில் இருந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடிநீர் வசதியையும் கைக்கு எட்டும் தூரத்தில் இல்லை. எள் போட்டால் எண்ணெய்யாகிவிடும் கூட்டத்தில், மயங்கிவிழுந்துவர்களுக்கான முதலுதவி சிகிச்சைக்கான ஸ்ட்ரெச்சர்களை விரைந்து கொண்டு வருவதும் பெரும்பாடாக அமைந்தது. ஆம்புலன்ஸ்கள் நகர இடமின்றிப் போக்குவரத்து நெருக்கடி. மெட்ரோ ரயில், பறக்கும் ரயில், மாநகரப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் நிரம்பி வழிந்தன. மெரினாவுக்கு அருகிலேயே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை ஆகியவை உள்ளன. அங்கு செல்வதற்கே 2 மணி நேரத்திற்கு மேலானது. இவை போன்ற நெருக்கடிகள்தான் 5 உயிர்களை அநியாயமாகப் பறித்துவிட்டது.
கும்பகோணத்தில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற மகாமகத் திருவிழாவில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவருடைய தோழியும் புனித நீராடச் சென்றபோது கூட்ட நெரிசலில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அ.தி.மு.க. ஆட்சியில் சென்னையில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் வாங்கலாம் என முண்டியடித்துச் சென்ற மக்கள் நெரிசலில் சிக்கிப் பலியானார்கள். வடமாநிலங்களில் கும்பமேளா தொடங்கி சாமியார் தரிசனம் வரை நெரிசலில் சிக்கிப் பலியாவது தொடர்கதையாக உள்ளது.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அனுமதிக்காக காத்திருந்து அவரை அணுக முடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னெச்சரிக்கை இன்றி திறந்து விட்டதால் 2016ல்பல நூறு உயிர்கள் பலியாகின.
மெரினாவில் கூட்ட நெரிசல்-நெருக்கடி ஏற்படவில்லை. வெயிலும், நீர்ச்சத்துக் குறைபாடும், அதனால் ஏற்பட்ட மாரடைப்பும் 5 உயிர்களைப் பறித்திருக்கிறது. இதை நேர்மையான முறையில் ஏற்றுக்கொண்டு, நிவாரணத் தொகை அளித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது கூடுதல் கவனத்துடன் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
மெரினா உயிரிழப்புகளை அரசியல் செய்யலாமா-கூடாதா என்று கட்சிகளிடையே விவாதம் எழுகிறது. அரசியல் செய்யலாம். ஆனால், அடுத்தவர் மீது பழிபோட்டுத் தப்பித்துவிட முடியாது. இந்த உயிழப்புகளில் விமானப்படை தொடங்கி மத்திய-மாநில அரசுகள் வரை கூட்டுப்பொறுப்பு உள்ளது.