இந்தியாவில் நொய்டாவிலும், தமிழ்நாட்டிலும் சாம்சங்கின் உற்பத்தின் ஆலைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த ஆலை இயங்கி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் சுமார் 1,700 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த தொழிலாளர்கள் ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ துவங்கி இருக்கிறார்கள். இந்த சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், ஊதியத்தை உயர்த்த தர வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி 1500 தொழிலார்கள் கடந்த சில தினங்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 200 தொழிலாளர்கள் மட்டுமே ஆலைக்குள் வேலை செய்து வருகின்றனர். இதனால் கடந்த 9ம் தேதி முதல் ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழிற்சங்க மையத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார், ஆலை நிர்வாகத்திடம் பேசிப்பார்த்தும் அவர்கள் பேச மறுத்துள்ளனர். இதையடுத்து தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசனுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். அதன் பின்னர் அமைச்சர் ஆலை நிர்வாகத்திடம் பேசி இருக்கிறார். அந்த பேச்சின் அடிப்படையில் அவர் போராடும் தொழிலாளர்களிடம் பேச இருக்கிறார்.
மேலும் , முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து நாளை சென்னை திரும்பியதும் இது குறித்து பேசி முடிவெடுக்கப்படும். அது வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.