மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சுமார் 21 குழந்தைகள் கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
குழந்தைகள் நலக் குழு(CWC) கடந்த வாரம் இந்தூர் ஆதரவற்றோர் இல்லத்தில் திடீர் ஆய்வு நடத்தச் சென்றபோது இந்த அதிர்ச்சிகர சம்பவம் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் செய்யும் சிறிய தவறுகளுக்கு அங்கு பணியில் உள்ள ஊழியர்கள் தங்களை சித்திரவதை செய்வதாக குழந்தைகள் அதிகாரிகளிடம் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தலைகீழாக தொங்கவிடப்பட்டதாகவும், சூடான இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்டதாகவும், ஆடைகளை கலைந்து புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் அந்த குழந்தைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், மிளகாயை எரித்து அதனால் ஏற்படும் புகையை உள்ளிழுக்கச் செய்து கொடுமை செய்ததாகவும் குழந்தைகள் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தூர் ஆதரவற்றோர் இல்லத்தில் பணிபுரிந்த அந்த ஐந்து ஊழியர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டு மத்தியப் பிரதேச காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
“நான்கு வயது குழந்தை குளியலறையில் பூட்டி வைக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்கள் வரை உணவு கொடுக்கப்படவில்லை” என்று FIR-யில் பதிவு செய்யப்பட்டிருப்பது குழந்தைகள் எதிர்கொண்ட கொடூரங்களை உணர்த்துகிறது.
Vatsalyapuram Jain அறக்கட்டளையால் நடத்தப்படும் அந்த ஆதரவற்றோர் இல்லம் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரித்துள்ளனர்.
இந்த அறக்கட்டளைக்கு பெங்களூரு, சூரத், ஜோத்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Published by அசோக் முருகன்