பள்ளி செல்லும் மாணவர்கள் (students) 13 வயது முதலே புகை மற்றும் மது உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகி வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
டில்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், உள்ளிட்ட இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட ஒரு பெரிய பள்ளி ஆய்வில், குழந்தைகள் மிகக் குறைந்த வயதிலேயே (Drugs) போதைப்பொருட்களைப் பரிசோதிக்கத் தொடங்குகிறார்கள் என்பதைக் காட்டியுள்ளது. மேலும், சராசரியாக போதைப்பொருள் பயன்பாடு தொடங்கும் வயது 12.9 ஆக இருப்பதுடன், சில மாணவர்கள் 11 வயதிலிருந்தே இத்தகைய பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், இந்த மாதம் தேசிய மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஏழு பள்ளி மாணவர்களில் ஒருவர் குறைந்தபட்சம் ஒருமுறையாவது மனோவியல் பொருளை (மதுபானங்கள், புகையிலை, கஞ்சா) பயன்படுத்தியுள்ளதாக கூறுகிறது.

மேலும் இந்த ஆய்வு, டெல்லி, பெங்களூரு, மும்பை, லக்னோ, சண்டிகர், ஹைதராபாத், இம்பால், ஜம்மு, திப்ருகார் மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களில்,15 வயதிற்குட்பட்ட 5,920 பள்ளி மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டதாகும. இந்த ஆய்வின் முடிவுகளின்படி, 15.1% மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் கடந்த ஒரு ஆண்டில் 10.3%, கடந்த ஒரு மாதத்தில் 7.2% மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, புகையிலை (4%) மற்றும் மதுபானம் (3.8%) ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களாக உள்ளன. இதற்கு அடுத்தபடியாக, ஓபியாய்டுகள் (வலி நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் போதைப்பொருட்களின் ஒரு வகை) (2.8%), கஞ்சா (2%), மற்றும் உள்ளிழுக்கும் மருந்துகள் (1.9%) பயன்படுத்தப்படுகின்றன. ஓபியாய்டு பயன்பாட்டின் பெரும்பகுதி மருத்துவர் பரிந்துரை இல்லாத மருந்து மாத்திரைகளுடன் தொடர்புடையதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், குடும்பம் மற்றும் நண்பர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 40% பேர் வீட்டில் புகையிலை அல்லது மதுபான பயன்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் போதைப்பொருளுக்கு அடிமையாகும் அபாயத்தை குறைக்கவும், நடுநிலைப் பள்ளிக்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் (researchers) வலியுறுத்துகின்றனர்.

மொத்தத்தில், இந்த ஆய்வு இந்தியாவில் இளம் பருவத்தினரிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் நிலையை தெளிவாக வெளிப்படுத்துவதாகவும், பரிசோதனை பழக்கம் வேரூன்றுவதற்கு முன்பே பள்ளி அடிப்படையிலான தடுப்பு நடவடிக்கைகள், முன்கூட்டிய அடையாளம் காணல் மற்றும் கட்டமைக்கப்பட்ட மனநல ஆதரவு அவசியம் என்பதையும் வலியுறுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
