அருணாச்சல பிரதசேத்திற்கு உட்பட்ட இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு(LAC) அருகே மேலும் 175 எல்லையோர கிராமங்களை உருவாக்கி தனது ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.
LAC-க்கு அருகே சீனாவின் ‘சியோகாங் (வளமான கிராமங்கள்) திட்டத்தின் கீழ்’ ஏற்கனவே 628 கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கிராமங்கள் சீனாவின் பிராந்திய உரிமைகோரல்களை வலுப்படுத்தவும், LAC அருகே தனது இராணுவத் தயார்நிலையை அதிகரிக்கவும் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எல்லையோர கிராமங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், திபெத் மற்றும் LAC-க்கு அருகில் உள்ள பகுதிகளில் விரிவான ராணுவ உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
லடாக், ஹிமாச்சல் பிரதேசம் எல்லையோரம் உள்ள தனது ‘G-219’ தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் எல்லையோரம் உள்ள தனது ‘G-318’ தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திபெத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்கிற உரிமையை தீவிரமாக வெளிப்படுத்தவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அதிகரித்து பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு உத்திகளாக சீனாவின் இந்த திட்டங்கள் கருதப்படுகிறது.