பிரபல நடன இயக்குநர் ஜானிக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது மத்திய அரசு.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு நடனம் அமைத்து வருபவர் ஜானி.
கடந்த 2022ல் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் ‘மேகம் கருக்காதா..’ பாடலுக்கு நடனம் அமைத்தது பலரையும் கவர்ந்தது. அப்பாடலுக்கு சிறந்த முறையில் நடனம் அமைத்திருக்கிறார் என்று ஜானிக்கு சிறந்த நடன இயக்குநர் விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.
இந்நிலையில், ஜானியின் நடன குழுவில் இருந்த 21 வயது பெண் பாலியல் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை 16 வயதில் இருந்து பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார் ஜானி என்று அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் தெலுங்கானா போலீசார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர்.
ஜாமீன் கோரியதை அடுத்து வரும் 10ம் தேதி வரை அவருக்கு ஜாமீன் அளித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த ஆண்டும் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார் ஜானி. போக்சோ வழக்கில் அவர் கைதானதால் தேசிய விருது கேள்விக்குறியாக இருந்தது. அதன்படியே, வழக்கின் தீவிரம் கருதி ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. தேசிய திரைப்பட விழாவில் பங்கேற்க அவருக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பும் திரும்ப பெறப்படுகிறது என்று அறிவித்துள்ளது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை.
நாளை புதுடெல்லியில் 70வது தேசிய திரைப்பட விழா நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.