தேர்தல் நெருங்கும்போதுதான் சில கட்சிகள் உயிர்ப்புடன் இருப்பதே மக்களுக்குத் தெரியவரும். 5 ஆண்டுகள் மக்களுக்காக என்னென்ன செய்தார்கள் என்று யோசித்துப் பார்த்தால் எதுவும் இருக்காது. ஆனால், அரசியலில் அதெல்லாம் தேவையில்லை. எதிர்க்கட்சியாக நான்கரை ஆண்டுகள் கொடநாட்டில் ஓய்வெடுத்துவிட்டு, கடைசி 6 மாதம் மட்டும் அரசியல் செய்த ஜெயலலிதாவை (Jayalalithaa) மறுபடி மறுபடி முதலமைச்சராக்கிய பெருமை தமிழ்நாட்டிற்குரியது
பெரிய கட்சியின் தலைவரே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களின் வாக்குகளை வாங்கும்போது, நமக்குத் தெரிந்த அரசியலை வைத்து சீட்டு வாங்குவோம், எம்.எல்.ஏ-எம்.பி. ஆகிவிடுவோம். முடிந்தால், ஆட்சியில் பங்கு கேட்போம், அமைச்சராவோம் என்கிற விருப்பம் எல்லாக் கட்சிகளுக்கும் உண்டு. அரசியல் என்பதே பதவியும் அதிகாரமும்தானே. அது பெரிய கட்சிகளுக்கு மட்டும்தானா? அதனுடன் கூட்டணி சேர்ந்து நிற்கிற மற்ற கட்சிகளுக்கு கிடையாதா? என்று நியாயக் குரல்கள் கேட்கும்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மெஜாரிட்டி எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும், தன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது. மேற்குவங்கத்தில் இடதுசாரி அரசு 30 ஆண்டுகளுக்கு மேல் தலைமை வகித்தபோது, அதற்கு தலைமை வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கு மாநில அமைச்சரவையில் இடம் கொடுத்தது. தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சிக்கான குரல்கள் ஒலிக்கின்றன.
தி.மு.க கூட்டணியில் 2004ல் தொடங்கி, 2014 நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் தவிர்த்து, இந்த 2026 வரை கூட்டணியில் உள்ள கட்சி இந்திய தேசிய காங்கிரஸ். தமிழ்நாட்டில் 1967ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ், 60 ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டணி மந்திரிசபையிலாவது இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக எழுப்பி வருகிறது. அ.தி.மு.க.வை மொத்தமாக இயக்குகின்ற பா.ஜ.க. தலைமை, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் என்கிறது. அதாவது, பா.ஜ.க.வுக்கும் அமைச்சரவையில் பங்கு உண்டு என்பதுதான் இதன் அர்த்தம்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami), டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தபோது, கூட்டணி ஆட்சி பற்றி பா.ஜ.க. வலியுறுத்த, அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பழனிசாமி தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன. தி.மு.க.விடம் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கூட்டணி அமைச்சரவை பற்றி வலியுறுத்துகிறபோதும் இதே கருத்தே வெளிப்படுகிறது. கேரளாவில், மேற்குவங்கத்தில், பீகாரில், மராட்டியத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் போது, தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மையா?
இதுவரையிலான தேர்தல் கள வரலாறு அப்படித்தான் சொல்கிறது. 1977 நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் மாதம் நடந்தது. அதில் அ.தி.மு.க.-இந்திரா காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தக் கூட்டணியில் இருந்தது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 36 தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. அடுத்த 3 மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அ.தி.மு.க.விடம் சரிக்குப் பாதியான தொகுதிகளை வலியுறுத்தியது இந்திரா காங்கிரஸ். எம்.ஜி.ஆர். ஒப்புக்கொள்ளவில்லை. இந்திரா காங்கிரசுடன் கூட்டணி சேராமல் போட்டியிட்ட அ.தி.மு.க. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சி அமைத்தது.
1980 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.-இந்திரா காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தன. 40 தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்றன. சில மாதங்கள் கழித்து சட்டமன்றத் தேர்தல் நடந்தது. தி.மு.க.வும் இந்திரா காங்கிரசும் சமமான அளவில் தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு போட்டியிட்டன. வெற்றி கிடைக்கவில்லை. மீண்டும் அ.தி.மு.க. (ADMK) தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சராக யாரை மக்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதைப் பொறுத்தே, அந்தக் கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் வாக்களிப்பார்கள். அதிருப்தியடையும் கட்சிகள் கூட்டணி மாறுவதும் உண்டு. அதனால் தேர்தல் முடிவுகள் கூடி மாறியிருக்கிறது. ஆனால், மக்கள் யாரை முதலமைச்சராக்க நினைக்கிறார்களோ அந்தக் கட்சிக்கே தனிப் பெரும்பான்மை வழங்கித் தீர்ப்பளித்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை தொங்கு சட்டசபை என்பது அமைந்ததில்லை. 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தாராளமாக சீட் ஒதுக்கிவிட்டு, மெஜாரிட்டிக்குத் தேவையான சீட்டுகளைவிட 10 சீட்டுகள் மட்டுமே கூடுதலாக நின்றது தி.மு.க. அதனால், தி.மு.கவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்து வலிமையான வெற்றியைத் தந்தார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
அவர்கள் பார்ப்பது, தங்களை ஆளப்போவது காமராஜரா, அண்ணாவா, கலைஞர் கருணாநிதியா, எம்.ஜி.ஆரா, ஜெயலலிதாவா, மு.க.ஸ்டாலினா என்பதைத்தான். அதனால்தான் இதுவரை ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் இருந்தாலும் சினிமா நட்சத்திரம் என்ற அந்தஸ்து கொண்ட நடிகர் விஜய் என்ற தனி நபரை முன்னிறுத்தி அரசியல் காய்கள் நகர்த்தப்படுகின்றன. தலை உள்ள கட்சிகள் அமைச்சரவைக்கு ஆசைப்படலாம். வால்கள் ஆடுவது வம்பில்தான் முடியும்.
