நிதி ஒதுக்கீடு, வரிப்பகிர்வில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மத்திய அரசின் இந்த ஓரவஞ்சனையால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப் மாநிலங்கள் தங்களுக்கு தேவையான வரிப்பங்கீடு, நிதிஒதுக்கீட்டினை பெற கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே அதன் மூலமே தங்களுக்கு வேண்டிய நிதியைப்பெற்றது கேரளா.
இந்த நிலையில் மத்திய அரசு 16வது நிதிக்குழு அமைத்திருப்பதால் இதன் பின்னணியில் என்ன உள்ளது? மத்திய அரசு என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறது என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு.
இதுகுறித்து ஆலோசித்து ஒரு முடிவெடுக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மாநாட்டினை கூட்டி இருக்கிறது கேரளா. ஹயாட் ரிஜன்ஸி ஓட்டலில் நடந்த இந்த மாநாட்டில் கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுகா, தெலுங்கானா நிதி அமைச்சர் மல்லு பாட்டி விக்ரமர்கா, பஞ்சாப் அமைச்சர் ஹர்பால் சிங் சீமா ஆகியோர் பங்கேற்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் இம்மாநாட்டினை தொடங்கி வைத்தார்.
16வது நிதி கமிஷனுக்கு அறிக்கை வழங்குவது குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டை தொடங்கி வைத்த பினராயி விஜயன், ‘’மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வினை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்’’ என்று கோரிக்கையினை முன்வைத்து, ‘’மத்திய அரசின் ஓரவஞ்சனையால் நாட்டின் கூட்டாட்சி பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது. உரிய நிதியைப்பெற நீதிமன்றங்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு மாநிலங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே, நாட்டின் நிதி கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதற்கு இம்மாநாடு தேவையான பரிந்துரைகளை வழங்கிடும்’’ என்றார்.
பொதுச்செலவினத்தில் 62.4% மாநிலங்களுக்கானது என்று இருக்கும் நிலையில், மொத்த வருவாயில் 37.3% மட்டுமே தற்போது கிடைக்கிறது. 63% நிதியை மத்திய அரசே வைத்துக்கொள்கிறது. மத்திய அரசின் வருவாயில் 41%ஐ மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்கிற 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரை முழுமையாக செயல்படுத்தப்படாததால் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் சந்தித்த கடுமையான பாதிப்புகளையும் குறித்து இம்மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.