தமிழ்நாட்டை இதுவரை 3 கட்சிகள் ஆட்சி செய்திருக்கின்றன. முதலில் ஆட்சி செய்தது காங்கிரஸ். அதன்பின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. பின்னர் அ.தி.மு.கவும் தி.மு.கவும் மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்தாலும், தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி, அ.தி.மு.க.தான். அந்தக் கட்சி தொடங்கப்பட்டு 53 ஆண்டுகளாகிற நிலையில் எம்.ஜி.ஆர்(MGR), ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) என 5 முதலமைச்சர்களைக் கண்டு 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளது.
1977ல் தொடங்கி பல நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சட்டமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு சில தேர்தல்களில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. இருப்பினும், அதன் வாக்கு வங்கி நிலையானதாகவும் வலிமையானதாகவும் இருந்து வந்தது. ஒரு கோடி தொண்டர்கள், ஒன்றரை கோடி தொண்டர்கள் என்று ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சொல்லப்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்தபோது, அ.தி.மு.க தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது. நாடாளுமன்றத்தில் 37 மக்களவை உறுப்பினர்களையும், மாநிலங்களவையையும் சேர்த்தால் ஏறத்தாழ 50 எம்.பி.க்களுடனும் இருந்தது.
அ.தி.மு.க.வில் சசிகலா தலையெடுப்பதைத் தடுத்த டெல்லி, சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியையும், சசிகலாவால் (Sasikala) பதவியிழந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த வித்யாசாகர் மூலம் இணைய வைத்தது மத்திய பா.ஜ.க. அரசு. அதன்பிறகு, மத்திய பா.ஜ.க அரசு சொன்னதற்கெல்லாம் தலையாட்டியபடி நடந்து கொண்டது அ.தி.மு.க. அரசு.
தி.மு.க. எதிர்த்த நீட் தேர்வை ஜெயலலிதாவும் எதிர்த்தார். உதய் மின் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு அவர் உடன்படவில்லை. ஆனால், ஜெயலலிதா உடல்நலன் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே அ.தி.மு.க. அமைச்சர்கள் டெல்லிக்கு ஓடிச் சென்று நீட் தேர்வு, உதய் மின் திட்டம் ஆகியவற்றுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர். பின்னர், சொத்து வரி உயர்வு உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு தலையாட்டியது. அது மட்டுமின்றி, பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் எந்த மசோதா கொண்டு வந்தாலும் அதனை ஆதரித்துத் தீர வேண்டிய கட்டாயத்திற்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் தள்ளப்பட்டனர். வேளாண் சட்டங்கள் திருத்த மசோதா, குடியுரிமை சட்ட திருத்த மசோதா, முத்தலாக் தொடர்பான மசோதா உள்ளிட்டவற்றை அ.தி.மு.க. ஆதரித்தது. அதற்காக நியாயங்களைத் தேடிக் கண்டறிந்து விளக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.
அ.தி.மு.க. தனது தனித்தன்மையை இழந்து கொண்டிருப்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால், முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது அமைச்சரவையில் இருந்தவர்களுக்கும் மிச்சமிருந்த 4 ஆண்டுகால பதவிதான் முக்கியமானதாக இருந்தது. அது அ.தி.முக. தொண்டர்களையே சலிப்படைய வைத்தது. அ.தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்ட தினகரன் உள்ளிட்டவர்கள் தனி அணியாக செயல்பட்டனர்.
அதன் காரணமாக, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை சரித்து, தோல்வியடையச் செய்தது. 2021ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள் உள்ளிட்ட எதிலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. அதன் வாக்குசதவீதமும் சரிந்துவிட்டது. ஜெயலலிதா இறந்தபோது 37 மக்களவை எம்.பி.க்களைக் கொண்டிருந்த அ.தி.மு.க.வுக்கு இப்போது ஒரு எம்.பி.கூட மக்களவையில் இல்லை. மாநிலங்களவையிலும் பலம் சிறுத்துவிட்டது.
பனை மரம் படுத்துவிட்டால் பன்றிக்குட்டிக்கூட தாண்டிப்போகும் என்றொரு பழமொழி உண்டு. அ.தி.மு.க.வின் செல்வாக்கு சரிந்ததையடுத்து, தமிழ்நாட்டு பா.ஜ.க.வினர் தாங்கள்தான் இரண்டாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்தனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களிடமிருந்து பிரிந்து நின்ற அ.தி.மு.க.வை எளிதாக நிர்பந்தம் செய்து பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் சேர்த்துவிட்டனர். புதிய கட்சியான த.வெ.க.வின் தலைவர் நடிகர் விஜய், தமிழ்நாட்டில் போட்டியே தி.மு.க.வுக்கும் த.வெ.கவுக்கும்தான் என்கிறார். களத்தில் இல்லாத கட்சிகளைப் பற்றி நான் பேச மாட்டேன் என்று அ.தி.மு.க.வை சீண்டுகிறார். அ.தி.மு.க. தொண்டர்களோ, இந்த விஜய்தானே அ.தி.மு.க. தலைவியான முதலமைச்சர் ஜெயலலிதாவைத் தேடி தன் அப்பாவோடு கொடநாடு சென்று, மன்னிப்புக் கேட்டவர்? வீடியோ பேசும்போதுகூட எழுந்து நின்று கைக்கட்டி பவ்யமாக பேசியவர்? நம்ம அம்மா உயிரோடு இருந்திருந்தால் அந்த அளவுக்குப் பேச தைரியம் வந்திருக்குமா? என்று தங்களின் தற்போதைய தலைமையையே விமர்சிக்கிறார்கள்.
கண்முன்னே ஒரு பிரம்மாண்ட கட்டடம் சரிவதை எல்லாரும் வேடிக்கைப் பார்ப்பது போன்ற நிலைமையில் உள்ளது அ.தி.மு.க.
