சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் நிதியைக் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல முறை வலியுறுத்தி வந்தார். செப்டம்பர் 27ஆம் நாள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்தித்து இந்தக் கோரிக்கையையும் வலியுறுத்தினார். மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தாமதமும், மற்ற மாநிலங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது காட்டிய பாரபட்சமும் சென்னையின் பல பகுதிகளிலும் மெட்ரோ ரயில் பயணிகளைத் தாமதப்படுத்தி, மக்களைப் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறது. மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து இந்தப் பணிகளைத் தொடர்ந்து வந்தது.
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் இது குறித்து விளக்கமளித்தபோது, மத்திய நிதியமைச்சர் அதனை மறுக்கும் வகையில், இது மாநில அரசின் திட்டம்தான் என்று சொல்லி, மத்திய அரசுக்குப் பொறுப்பில்லை என்பது போல கைவிரித்தார். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் என்பது நெடுங்காலக் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் வகையில் செயல்பாட்டைத் தொடங்கியவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி. இதற்கான நிதியப் பெறுவதிலும் திட்டத்தை செயல்படுத்துவதிலும் முனைப்பாக செயல்பட்டவர் அன்றைய துணை முதலமைச்சரும் இன்றைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.
அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதைக்கான திட்டம் வகுக்கப்பட்டது. முதலில் மாநில அரசின் திட்டமாக இது உருவாக்கப்பட்டாலும், நிதிச்சுமை மற்றும் கட்டமைப்புக் காரணங்களை உணர்ந்து மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் திட்டமாக மாற்றப்பட்டது. மத்திய நிதியமைச்சர் இதனை உணராமல், மாநில அரசுத் திட்டம்தான் என்று சொல்லி வந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும் மாநில நிதியமைச்சரும் இது குறித்த உண்மைத் தரவுகளுடன் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், 118.9 கிலோமீட்டர் நீளத்திற்கான 63ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு அக்டோபர் 3ஆம் நாளன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மதிப்பீட்டுத் தொகையில், 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் மத்திய அரசின் பங்காக ஒதுக்கீடு செய்யப்படுவதால், இதில் மத்திய அரசுடன் இணைந்து நிறைவேற்றும் திட்டம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
திட்ட மதிப்பீட்டில் மீதமுள்ள தொகையில், தமிழ்நாடு அரசின் பங்கு 22ஆயிரத்து 228 கோடி ரூபாயாகும். இவை போக எஞ்சியுள்ள 33ஆயிரத்து 593 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று சென்னை மெட்ரோ இரண்டாவது கட்டத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மூன்று பகுதிகளைக் கொண்டது இந்த இரண்டாவது கட்ட மெட்ரோ திட்டம். 1.மாதவரம் முதல் சிப்கா வரையிலானது. 2. கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலானது. 3. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலானது. இவற்றின் மூலமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மெட்ரோ ரயில் வசதியைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். மொத்தம் 128 ரயில் நிறுத்தங்கள் இந்த இரண்டாவது மெட்ரோ திட்டத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் வேகம், அதன் பயண நேரம், தொடர் சேவை இவற்றால் சென்னையில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டின் தலைநகரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்குப் பயன் கிடைக்கும்போது மதுரை, கோவை, திருச்சி என அடுத்தடுத்த பெருநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு சார்ந்த திட்டங்களில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிப்பட்டு வரும் அதிருப்திக் குரல்கள் வெளிப்பட்டு வந்துள்ள நிலையில், முதலமைச்சரும் அவரது அமைச்சர்களும் எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, மத்திய அரசு தன் பங்களிப்பை செலுத்தியிருப்பது வரவேற்புக்குரியது
கூட்டாட்சித் தன்மை கொண்ட அரசியலமைப்பைக் கொண்டிருக்கிறது இந்திய ஒன்றியம். மாநில உரிமைகளுக்கானக் குரல்கள் வலுவாக ஒலித்தால்தான், கூட்டாட்சித் தத்துவத்தின் உண்மை நோக்கம் முழுமையடையும். தமிழ்நாட்டிலிருந்துதான் அந்தக் குரல் அழுத்தமாகவும் அதிகமாகவும் ஒலித்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்தும் உரிமைக் குரல்கள் கேட்கின்றன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல், இந்தியா முழுவதும் மாநில உரிமைப் பயணத்திற்கான தொடக்கமாகட்டும்.