இருபதாயிரம் ரூபாய் கொடுத்தால் பீகார் பெண்கள் கிடைப்பார்கள் என்ற உத்தரகாண்ட் மாநில பெண்கள் நலத்துறை அமைச்சரின் கணவர் பேச்சு அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜக ஆளும் மாநிலம் உத்தரகாண்ட். இம்மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ரேகா ஆர்யா. இவரின் கணவர் கிரிதாரி லால். இவர் உத்தரகாண்டில் அலமோரா பகுதியில் அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் பேசியபோது, ’’இன்னும் உங்களுக்கு திருமணம் ஆகவில்லையா? வயதான காலத்திலா திருமணம் செய்யப்போறீங்க? கவலைப்படாதீங்க, ரூ.20 ஆயிரமோ, ரூ.25 ஆயிரமோ கொடுத்தா பீகார் பெண்கள் கிடைப்பார்கள்’’ என்று நிகழ்வில் இருந்த இளைஞர்களைப் பார்த்து பேசி இருந்தார்.

இந்த வீடியோ வைரலாகிய நிலையில், பெண்கள் நலத்துறை அமைச்சரின் கணவர் பேச்சு இது பாஜகவின் பெண்கள் மனநிலையை காட்டுகிறது என்று அம்மாநிலத்தின் அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கண்டனங்கள் வலுத்து வருவதை அடுத்து மன்னிப்பு வீடியோ வெளியிட்டிருக்கிறார் கிரிதாரி லால்.
