கொரோனா எதிரொலியால் கண் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், ஆண்டுக்கு 42 லட்சம் மாணவர்களுக்கு கை கொடுக்கிறது பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்.
கொரோனா முழு ஊரடங்கினால் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால் மாணவ, மாணவிகள் அனைவருமே செல்போன் மற்றும் கணினிகளில் மட்டுமே பாடங்களை படித்து வரும் நிலை இருந்தது. அதிக நேரம் செல்போன் மற்றும் கணினிகளில் செலவிட்டதால் மாணவ, மாணவிகளுக்கு கண் பாதிப்புகள் அதிகரித்துள்ளன என்று தெரியவந்துள்ளது. தவிர மாணவ, மாணவிகளுக்கு செல்போன் அதிக நேரம் பார்க்கும் பழக்கமும் உள்ளது. இதனாலும் கண் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
கண் பார்வை பாதிப்புகள் இன்று வரையிலும் இருந்து வருகின்றன. கண் பார்வை பாதிக்கப்படும் இந்த மாணவர்களுக்கு எல்லாம், கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்’ பயனுள்ளதாக உள்ளது
இந்த திட்டத்தின் மூலம் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனைகள் செய்து கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படு வருகிறது. தமிழ்நாட்டின் ஆண்டிற்கு 42 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெற்று வருகின்றனர்.
2021ம் ஆண்டிற்கு பிறகு பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்கிறார் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம். அவர் மேலும், ஆண்டிற்கு ஆண்டு இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2021-22ஆண்டில் 1.61 லட்சம் மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் 2.14 லட்சம் மாணவர்களாக அதிகரித்துள்ளனர்’’ என்று கூறியிருக்கும் அவர், வீட்டிற்கு வெளியே பிள்ளைகளை வெயிலில் விளையாட விட வேண்டும். கண்ணுக்கு சத்தான உணவுகள் வழங்க வேண்டும் . இதன் மூலம் மேலும் பார்வைக்குறைவு ஏற்படாமலும், பார்வைக்குறைவு உள்ளவர்களுக்கு லென்ஸ் பவர் அதிகரிக்காமலும் தடுக்கலாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.