“இலவச கொரோனா தடுப்பூசிகள்” பற்றிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் பொய்களின் அதிர்ச்சிகர உண்மைகள் தெரியவந்துள்ளதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே தனது X தள கணக்கில் பதிவிட்டுள்ளார்.
“மோடி இந்தியர்களுக்கு இலவச கோவிட் தடுப்பூசிகளை வழங்கினார்” என்று பாஜக தேர்தல் பிரச்சாரங்களில் தொடர்ந்து கூறி வருவது அபத்தமான பொய் என்று அவர் கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் போது, மோடி அரசாங்கம் சர்வதேச வங்கிகளில் இருந்து சுமார் 73,384 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக, சாகேத் கோகலேவுக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் அளித்த பதிலில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ‘கொரோனா தடுப்பூசிகள்’ குறித்து சாகேத் கோகலே கேள்வி கேட்டதற்கு, 73,384 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக புள்ளிவிவரங்களோடு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.
அதிகபட்சமாக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து சுமார் 22,248 கோடி ரூபாய் மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் இருந்து 16,678 கோடி ரூபாய்யும் ஒன்றிய அரசு கடன் பெற்றுள்ளது.
மேலும், சர்வதேச வளர்ச்சி சங்கம், பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகிய வங்கிகளிடம் இருந்தும் ஒரே ஆண்டில் கொரோனா தொற்றுக்காக ஒன்றிய அரசு கடன் பெற்றுள்ளது.
“இதன் அர்த்தம் என்ன? இதன் அர்த்தம், இன்று ஒவ்வொரு இந்திய குடிமகனும் கொரோனா தொற்றுக்காக வாங்கப்பட்ட கடன்களை சுமந்து வருகிறோம்”, என மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே இவை “இலவச தடுப்பூசிகள்” அல்ல என்றும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடன்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை என்றும், கூறியுள்ளார்.
இந்தியர்கள் மீது விதிக்கப்படும் அதிக வரிகள் மூலமே இந்த கொரோனா கடன்கள் திருப்பி செலுத்தப்படும், எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இலவச தடுப்பூசிகள் என்று எதுவும் இல்லை, பிரதமர் மோடி எப்போதும் போல் வெட்கமின்றி பொய் கூறி வருகிறார் என மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.