அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த ஊழலில் 24 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரசு மானியத்தில் வீடு கட்டும் திட்டம் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா. கடந்த 2017 -18ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமர் நிதி திட்டத்தின் கீழ் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்திருக்கிறது என்று பிடிஓக்கள் உள்பட 24 அதிகாரிகள் மீழ லஞ்ச ஒழிப்புதுறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நிதி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் வீடு கட்டி முடிக்கின்ற வரைக்கும் பணிகளை கண்காணித்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, ஜவ்வாதுமலை, தெள்ளார், வந்தவாசி ஒன்றியங்களில் 2017-18 ம் ஆண்டில் பயனாளிகளை தேர்வு செய்ததில் மோசடிகள் நடந்துள்ளது என்று அப்போதைய ஆரணி எம்.பி. விஷ்ணுபிரசாத் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டின்படி திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையின்பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன், விஷ்ணுபிரசாத் புகார் மனு குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த புகாரில் தொடர்புடைய 24 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளார் வேல்முருகன்.
திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினரிடையே இது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.