கோவிஷீல்டு தடுப்பூசி குறித்து சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்று பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இங்கிலாந்து நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசியால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக இங்கிலாந்தில் பிரச்சனை எழுந்து வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையில், ‘’ ரத்தம் உறைதல், பிளேட்லெட் குறைவு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்’’என்று அந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்த ஆஸ்ட்ரோஜினிகா நிறுவனமே இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்து நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரிப்பதற்கு பிரதமர் மோடி அனுமதி வழங்கியதால், மோடி மீது பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவின் இணையம் மூலமாக வழங்கப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டு வந்தது.
ஆனால், ‘’நாடாளுமன்றத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’என்று ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கு உரிய விளக்கம் அளித்துள்ளனர்.
கோவிஷீல்டு தடுப்பூசி குறித்து மக்களிடையே ஒருவித அச்சம் பரவிவரும் நிலையில், கோவேக்சின் தடுப்பூசியும் பக்கவிளைவுகள் கொண்டதா என்று மக்களிடையே அச்சம் பரவி வந்த நிலையில், ’’கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது’’ என்று பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.