சி.வி.சண்முகத்தின் பேச்சு மன்னிக்க முடியாத குற்றம் என்று வெடித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், எதிர்காலத்தில் இது போன்று பேசமாட்டேன் என்று பிரமாணப்பத்திரம் எழுதித்தர வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதிமுகவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதாவது, 12 மணி நேர வேலை நிறுத்தம் குறித்த சட்டதிருத்தம், கஞ்சா புழக்கம் மற்றும் மதுபான விற்பனை, வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது போன்ற விவகாரங்களில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததால் விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மீது 4 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சண்முகம். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 2 வழக்குகளை மட்டுமே ரத்து செய்தார். இதனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கின் விசாரணையின் போது, பொதுவெளியில் மாநிலத்தின் முதல்வரை அவதூறாக பேசியது அரசியல் சாசண விதிகளுக்கு எதிரானது. அதனால் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சண்முகத்திற்கு எதிர்தரப்பு வாதிட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பேசியபோது, ‘’சி.வி.சண்முகத்தின் பேச்சை நாங்கள் கேட்டோம். எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அந்த பேச்சு. அதனால்தான் சொல்கிறோம்…இந்த விவகாரத்தில் ஏன் சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்கக்கூடாது என்று?’’ எனச்சொன்ன பின்னர்,
‘’மன்னிப்பு கேட்பது மட்டுமல்ல; சண்முகத்தின் பேச்சு மன்னிக்க முடியாத குற்றம். அதனால் எதிர்காலத்தில் இனிமேல் இப்படி பேசமாட்டேன் என்று பிரமாணப்பத்திரம் எழுதித்தர வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கின் மறு விசாரணையை வரும் 15ம் தேதிக்குள் ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள். அதனால் மறு விசாரணையின் போது நீதிபதிகளின் அறிவுறுத்தலின் படி மன்னிப்பு கேட்டு பிரமாணப்பத்திரத்தை சண்முகம் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.