கர்நாடகாவைத் தொடர்ந்து மேற்கு வங்கமும் பாலியல் புகாரால் திகுதிகு வென்றிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் பெரும் பேசு பொருளாகி இருக்கிறது.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்க்கும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தேர்தலுக்கு பிறகான வன்முறை விகராங்களில் சட்டம் ஒழுங்கினை சுட்டிக்காட்டி திரிணாமுல் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஆனந்த போஸ். இந்நிலையில் அவர் மீது பாலியல் புகார் எழுந்து அம்மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர் ஆனந்த போஸ் தன்னிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக குற்றம்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக ஹரே தெரு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சகாரிகா கோஸ் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநில ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ஆளுநர் ஆனந்த போஸ் விவகாரமும் பெரிதாகிறது.
விவகாரம் பெரிதானதை அடுத்து, ஆளுநர் ஆனந்த போஸ் இதற்கு விளக்கம் அ ளித்திருக்கிறார். ‘’இது மாதிரியான புனையப்பட்ட கதைகளால் நான் பயப்பட மாட்டேன். என்னை இழிவுபடுத்தி ஆதாயம் தேட விரும்புவோரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உண்மை வெல்லும்’’ என்று கூறியிருக்கிறார்.
இது மாதிரியான புகார்களால், மேற்கு வங்கத்தில் ஊழல், வன்முறைக்கு எதிரான தனது போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
ஆளுநர் ஆனந்த போஸ் மீது பெண் ஒருவர் போலீசில் பாலியல் புகார் தெரிவித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், பெண் புகார் அளித்துள்ளாரா? அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து காவல்துறை தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.