ஆடை மாற்றுவதையும், குளிப்பதையும் வீடியோ எடுத்து அந்த நிர்வாண வீடியோக்களை இணையதளங்களில் வெளியிடுவதாக நாதக நிர்வாகி இளங்கோ மிரட்டியதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் 42 வயது பெண். அவர் அளித்த புகாரின் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி பட்டதாரி. கணவருடன் விவகாரத்திற்குப் பின்னர் திருச்சி அருகே வயலூரில் தனியார் ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலும் அவர் அங்கே வேலை செய்து வந்துள்ளார்.
அந்த ரிசார்ட்டில் பொது மேலாளராக இருந்தவரின் உறவினர் இளங்கோ என்கிற ஜாஜி. 50 வயதுக்காரர் இவர் இலங்கை தமிழர். நாதக நிர்வாகி. இவர் அப்பெண்ணிடம் அறிமுகமாகி, லண்டனில் தான் சூப்பர் மார்க்கெட் தொடங்க இருப்பதாகச் சொல்லி அதற்கு திருச்சியில் இருந்து மளிகைப்பொருட்கள் வாங்கி அனுப்பி வைக்குமாறும் சொல்லி மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார்.
அதன் பின்னர் துபாயில் அந்தப்பெண் பெயரில் நிறுவனம் தொடங்க இருப்பதாகச் சொல்லி அவரை துபாய்க்கு அழைத்திருக்கிறார் இளங்கோ. இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருந்தபோது அந்தப்பெண் ஆடை மாற்றுவதையும் குளிப்பதையும் அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளார் இளங்கோ.
இதன்பின்னர் ஈரோட்டைச் சேர்ந்த வாலிபரை மறுமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார் அப்பெண். கணவரை விட்டுவிட்டு தன்னுடன் லண்டனுக்கு வந்துவிடும்படி நச்சரித்திருக்கிறார் இளங்கோ. அதற்கு பெண் மறுத்ததால், துபாயில் எடுத்த நிர்வாண வீடியோக்களை இணைய தளங்களில் வெளியிட்டு விடுவதாகச் சொல்லி மிரட்டியிருக்கிறார். இதனால் அப்பெண் 21.7.2024 அன்ற் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். கணவர்தான் காப்பாற்றி இருக்கிறார்.
திருச்சி சைபர் கிரைம் போலீசில் இளங்கோ மீது அப்பெண் அளித்துள்ள புகார் மனுவில், மேற்கண்ட விபரங்களை கூறி இருகிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.