டிசம்பர் மாதம் என்றால் சென்னை நகர மக்கள் எச்சரிக்கையாகி விடுவார்கள். வர்தா, மிக்ஜாம் என சென்னையை மிரட்டிய புயல் சின்னங்களால் ஏற்பட்ட கடும் மழையும் அதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ள நீரும் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டன. இவை டிசம்பர் மாதத்தில்தான் நிகழ்ந்தன. 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை முறைப்படி திறந்துவிடுவதில் செல்வி.ஜெயலலிதா தலைமையிலான அன்றைய அ.தி.மு.க அரசு எடுத்த தாறுமாறான முடிவால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாகி, மனிதர்கள் மட்டுமின்றி பல உயிரினங்களும் பலியாயின. அதுவும் டிசம்பர் மாதத்தில் நடந்த கொடூரம்தான். அதனால் டிசம்பர் என்றாலே சென்னைவாசிகள் பதற்றமாகிவிடுவது இயல்பாகிவிட்டது.
சென்னையைத் தாண்டியும் தமிழ்நாடு இருக்கிறது. உண்மையில், சென்னை தவிர மற்ற பகுதிகள்தான் தமிழ்நாட்டின் மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டவை. அதிலும், தமிழ்நாட்டின் கடலோரப்பகுதி என்பது ஏறத்தாழ 1000 கி.மீ. நீளம் கொண்டது. வடகிழக்குப் பருவமழைக் காரணமான அக்டோபர்-நவம்பர்- டிசம்பர் மாதங்களில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்கள் புயல் சின்னங்களால் கடும் மழையையும் சூறாவளியையும் எதிர்கொள்வது வழக்கமானதுதான். கடலோர மக்கள் அதனை எதிர்பார்த்தே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். அதனால்தான், இந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் உருவாகியுள்ள டிட்வா புயலின் தாக்கத்திற்கும் அவர்கள் ஆயத்தமாகிவிட்டனர்.
பொதுவாக, புயல் சின்னங்கள் உருவானால்தான் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்குத் தேவையான அளவு மழை கிடைக்கும். அதன் மூலம் நீர்த்தேக்கங்கள் நிரம்பும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியும். அந்த வகையில், டிட்வா புயல் சின்னம் தமிழ்நாட்டுக்குத் தேவையான மழையைத் தருகின்ற இயற்கையின் வளம்தான். எனினும், வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகமாகக் கொண்டே இருந்ததால், மற்ற புயல் சின்னங்களைக் காட்டிலும் டிட்வா மீதான ஆர்வம் கூடிவிட்டது.
இலங்கையில் டிட்வா புயலின் தாக்கத்தால் நுவேரலியா உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழையும் நிலச்சரிவும் வெள்ளமும் ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானதால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளன. புயல் கரையைக் கடக்கும்போது இத்தகைய உயிர்ப்பலிகள் அதிகமாக இருக்கும். ஆனால், டிட்வா புயல் கடலிலேயேதான் இருந்தது. மெதுவாகவே நகர்ந்தது. ஆனால், அதனால் ஏற்பட்ட மழை என்பது கடுமையாக இருந்தது. இலங்கையில் பெரும் பாதிப்பு என்றதுமே தமிழ்நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகிவிட்டது.
மாநில அரசின் கண்காணிப்பு மையங்களுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நிலவரங்களைக் கேட்டறிந்ததுடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். அமைச்சர்கள் பலரும் அவர்களின் சொந்த மாவட்டங்களில் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இராமநாதபுரம் மாவட்டத்தின் வழியே நாகை, புதுச்சேரி கடற்பகுதிகளைக் கடந்து சென்னையில் கடும் மழையை ஏற்படுத்தி, ஆந்திர கரையோரமாக டிட்வா கரை கடக்கும் என எதிர்பார்க்கப்ப்டடதுபோலவே நிகழ்வுகள் இருந்தாலும், டிட்வா புயலின் நகர்வு என்பது மிகவும் மெதுவாக இருந்தது. கரையேறாமல் கடலில் இருந்தபடியே டிட்வா நின்று ஆடியது. அதனால், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் உட்புறப் பகுதிகளிலும் தொடர்ச்சியான மழை நீடித்தது.
எப்போது கரையேறும் என எதிர்பார்க்கப்பட்டதோ அதையும் மீறி, டிட்வா புயல் கடலிலேயே நீடித்தது. கடலோர மாவட்டங்களை ஒட்டியே அது நகர்ந்தது. புயலுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாகத்தான் தொடங்கின. டிட்வா என்று பெயர் வைக்கப்பட்ட புயலுக்குப் பட்டப் பெயரையும் சூட்டினார்கள். அதன் நகர்வை வைத்து, ‘கடலோர பைபாஸ் ரைடர்’ என்று பட்டப் பெயர் வைத்தார்கள்.
ஒரு புயல் ஏறத்தாழ 5 நாட்களுக்கும் மேலாக எப்போது கரையேறும், எங்கெங்கே மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினாலும், அதனால் ஏற்பட்ட மழைப் பொழிவு என்பது தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையானதாகும். வெயில் கடுமையாக இருந்தாலும் அன்றாடப் பணிகள் பாதிக்காது. ஆனால், மழை ஓரிரு நாள் தொடர்ந்தாலும் பல பணிகள் பாதிக்கப்படும். அந்த நெருக்கடி டிட்வா புயலால் ஏற்பட்டாலும். டிசம்பர் மாதம் இப்படித்தான் என்கிற தமிழ்நாட்டின் தலைநகர மக்களும் கடலோர மக்களும் எதிர்பார்த்தே இருந்ததை அறிந்து, நின்று நிதானமாக ஆடியிருக்கிறது டிட்வா
