
பக்திப் பாடல்களை ரீமிக்ஸ் செய்து சினிமாவில் குத்துப்பாடல்களாக பல படங்களில் காட்சிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அதில், சஷ்டியை நோக்க சரவண பவனார்.. பாடலை பதினெட்டு வயது இளமொட்டு மனது என்று சரத்குமார் – ரோஜா நடித்த சூரியன் படத்தில் இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஆனாலும் இப்போது சந்தானம் படத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு எழுந்தது போன்று 100 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடரப்படவில்லை என்பதால் அப்பாடல்கள் எல்லாம் படத்தில் இடம்பெற்றுவிட்டன. 100 கோடி இழப்பீடு வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்றதால் அப்பாடலை நீக்கிவிட்டார் சந்தானம்.

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில், ஸ்ரீ ஸ்ரீனிவாசா கோவிந்தா.. ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா.. பாடலை ’கிஸ்ஸா -47’ என்று மிக்ஸ் செய்திருந்தார்கள். இதைக்கேட்டு கொதித்தெழுந்தனர் ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர். இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.
திருப்பது கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற எடப்பாடி பழனிசாமியிடமும் இப்பாடலைப் போட்டுக்காட்டி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். பவன் கல்யாணின் அறிவுறுத்தலின் பேரிலேயே ஜனசேனா கட்சியினர் இந்தப் புகாரை அளித்தாக கூறப்படுகிறது.

திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவரான பானுப்பிரகாஷ், கிஸ்ஸா பாடலை படத்தில் இருந்து நீக்காவிட்டால் 100 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று சந்தானத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். டிடி நெக்ஸ்ட் லெவல் பட நிறுவனம் மீது கிரிமினல் வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்திருந்தார்.
கிஸ்ஸா பாடலை எழுதியவர், ஆடியவர், படத்தை தயாரித்தவர் எல்லோரையும் தமிழக பக்தர்கள் அடித்து உதைத்து தோலை உரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நாளை படம் ரிலீசாகவிருக்கும் நிலையில் விவகாரம் பெரிதாவதை உணர்ந்த பட நிறுவனம், அப்பாடலை படத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
எதிர்ப்புகள் வலுப்பதால் முடிவுக்கு வருகிறதா பக்திப் பாடல்கள் குத்துப் பாடல்களாகும் கலாச்சாரம்?