செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்படும் பொய் செய்திகள், படங்கள், வீடியோக்களை கண்டறியும் முயற்சியில், இந்திய WhatsApp பயனர்களுக்கு பிரத்யேக உண்மைச் சரிபார்ப்பு ஹெல்ப்லைனைத் தொடங்க மெட்டா நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக Misinformation Combat Alliance (MCA) கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொது மக்கள் பயன்படுத்த இந்த ஹெல்ப்லைன் வசதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக DeepFake வீடியோக்கள்/செய்திகளை பயனர்களுக்குக் கண்டறிந்து உதவ MCA கூட்டமைப்பு முயற்சி எடுத்து வருகிறது.
WhatsApp ஹெல்ப்லைன் மூலம் பயனர்கள் அனுப்பும் அனைத்து செய்திகளையும் நிர்வகிக்க ‘DeepFake Analysis Unit(DAU)’ என்கிற பிரிவை உருவாக்க உள்ளதாக MCA கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
“இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய பயனர்களிடையே செயற்கை நுண்ணறிவால் தவறான தகவல் பரவுவதைத் தடுக்க டீப்ஃபேக்ஸ் பகுப்பாய்வு பிரிவு(DAU) ஒரு முக்கியப் பங்காற்றும்”, MCA கூட்டமைப்புத் தலைவர் பாரத் குப்தா கூறியுள்ளார்.
“இந்த முயற்சியில் சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு அமைப்பால்(IFCN) அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் Meta நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவார்கள்”, என்று அவர் மேலும் கூறினார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த WhatsApp ஹெல்ப்லைன் மூலம் பயனர்களுக்கு ஆங்கில மொழியிலும் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று பிராந்திய மொழிகளிலும் சேவைகளை வழங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.
2024 தேர்தலில் AI சார்ந்த போலி செய்திகள் பரவுவதை தடுக்க தங்களின் தொழில்நுட்ப கொள்கையின் படி, Deepfake செய்திகளை WhatsApp-ல் இருந்து நீக்குவதற்கு ஹெல்ப்லைனைத் தொடங்க MCA கூட்டமைப்புடன் இணைந்துள்ளதாக, Meta நிறுவனத்தின் இந்திய பொதுக் கொள்கை இயக்குநர் ஷிவ்நாத் துக்ரால் கூறியுள்ளார்.
பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளைக் கொண்ட MCA கூட்டமைப்பு இந்தியாவில் பரப்பப்பட்டு வரும் பொய் செய்திகளை எதிர்த்தும் அதன் தாக்கங்களை எதிர்த்தும் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.