இன்னும் மூன்று தினங்களில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையிலும் அப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கப்படாமல் இருக்கிறது.
சென்சார் சான்றிதழ் தராமல் ஒன்றிய பாஜக அரசு இழுத்தடிக்கிறது என்பதால் வெகுண்டெழுந்த தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், ‘’ஜனநாயகன் படத்தை பல வாரங்களுக்கு முன்பே சென்சார் அதிகாரிகள் பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்’’ என்று கூறியிருந்தார்.

இன்றைய தினம், சென்சார் சான்றிதழ் கிடைக்கும் நிலை இருக்கிறது. சான்றிதழ் கிடைத்த பிறகு முன்பதிவு பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன.

படத்தில் நிறைய காட்சிகளை நீக்க வேண்டும் என்று சென்சார் அதிகாரிகள் சொன்னபடி படக்குழு செய்துவிட்டது. அப்படி இருந்தும் இன்று வரை சென்சார் சான்றிதழ் வழங்காமல் இருப்பதால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதில் இன்றைக்கும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
