
அரசியல் பின்னணி இருக்குங்குறானுங்க. ஆட்டோமேட்டிக்காக ஆட்டிக்கிட்டு வெளியில போயிடுவானுங்க… என்று deleted scene-ல் கொதித்தெழுந்திருக்கிறார் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
ஆறு ஆண்டுகளுக்குப் பின் பொள்ளாச்சி வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த கோவை மகளிர் நீதிமன்றம் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கும் நிலையில், இந்த பொள்ளாச்சி சம்பவம் குறித்து தான் இயக்கிய ‘ஒத்த செருப்பு’ படத்தில் காட்சி வைத்திருந்து பின்னர் படத்தில் இருந்து நீக்கிய ஒத்த செருப்பு deleted scene-ஐ இன்று வெளியிட்டிருக்கிறார் பார்த்திபன்.

அந்த வீடியோவில், ‘’இந்தோ பொள்ளாச்சியில.. 200க்கும் மேல.. எல்லாம் அப்பாவி பொண்ணுங்க.. அந்தப் பொண்ணுங்கள ஒரு நாலஞ்சு பேரு நம்ப வச்சு, கூட்டிக்கிட்டு போயி கற்பழிச்சி, சீரழிச்சி வீடியோவா எடுத்துப் போட்டுக் காட்டி போட்டுக் காட்டி அந்தக் குழந்தைங்க, அந்தப் பொண்ணுங்க , ’அண்ணா என்ன விட்டுடுங்கண்ணா..அண்ணா என்ன விட்டுடுங்கண்ணா.. என்ன பண்ணுவீங்க அவுங்கள.. அவுங்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனை கொடுத்திடுவீங்களா? அரசியல் பின்னணி இருக்குங்குறானுங்க. ஆட்டோமேட்டிக்காக ஆட்டிக்கிட்டு வெளியில போயிடுவானுங்க…’’ என்று வெடித்திருக்கிறார் பார்த்திபன்.

அந்த வீடியோவுடன் ஒரு பதிவினையும் வெளியிட்டிருக்கிறார்.
’’இது ஒத்த செருப்பு deleted scene-ல்!
அந்த நேரத்தில் எனக்கிருந்த ஆதங்கக் குரல்.
அப்படி தப்பித்து செல்லாதபடி …
வரைமுறையற்ற பொள்ளாச்சி பாலியல் பலாத்கார
வன்முறைக்கு பாரபட்சமற்ற அழுத்தமான தீர்ப்பு எழுதிய
penக்கு பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பில்
நன்றிகள் ஆயுளுக்கும்!
ஆயுள் தண்டனை என்பது
ஆயுளுக்குமான தண்டனையாக தானே
இருக்க வேண்டும் அது ஏன்
ஆயுள் பாத் போல சில வருடங்களில்
தண்டனையை தலை முழுகி விட்டு
வரும் தண்டனையாக கொடுக்கிறார்கள்
என்ற கேள்வி என் மன கோர்ட்டின் சாட்சி கூண்டில் பதிலின்றி நிற்கும்!
குற்றம் செய்பவர்களுக்கு உச்ச பட்ச
பயத்தை உண்டாக்கும் தீர்ப்பை வழங்கிய நீதிபதி நந்தனி தேவி அம்மையாருக்கு பாராட்டுக்கள்+ வாழ்த்துகள்.
உச்ச நீதிமன்றமும் இதே தீர்ப்பை உறுதிபடுத்தும் என்ற நம்பிக்கையுடன்
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.