பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் ஜனநாயக அரசாங்கத்தை விரும்புவதாகக் கூறுகின்றனர். ஆனால் ஜனநாயகத்தின் வரையறை காலத்திற்கு ஏற்றவாறு தொடர்ந்து வெவ்வேறு விதமாக வரையறுக்கப்படுகிறது.
ஜனநாயகம் என்றால் என்ன என்பதை மக்கள் உண்மையில் புரிந்து கொள்ளவில்லை எனில், சர்வாதிகாரிகள் மற்றும் ஜனநாயக விரோத அரசியல்வாதிகளால் சுரண்டப்படுவார்கள்.
இன்று, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாடுகளிலும் கூட, ஜனநாயகம் பெரும் அழுத்தத்தில் உள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் எமோரி பல்கலைக்கழகம் தலைமையிலான ஒரு புதிய ஆராய்ச்சி, இந்த கேள்வியை சுற்றிய மக்களின் புரிதலை வெளிப்படுத்தி உள்ளது.
“உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஜனநாயகத்தை எப்படி வரையறுக்கிறார்கள்?”
மிகவும் மாறுபட்ட அரசியல் சூழல்கள், ஆட்சி முறைகள், ஜனநாயக வரலாறுகள், புவியியல் அமைப்புகள், வளர்ச்சி நிலைகள் மற்றும் கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, எகிப்து, தாய்லாந்து மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 6,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
‘ஒரு நாட்டை ஜனநாயகமாக்குவது எது?’ என்ற கேள்விக்கு, மக்களிடம் 9 வெவ்வேறு பண்புகளை முன்வைக்கும்போது அவர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு ஆராய்ந்தது.
‘போட்டித் தேர்தல்கள்(Electoral Democracy) மற்றும் பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட சிவில் உரிமைகளுக்கான வலுவான பாதுகாப்பு(Liberal Democracy)’ ஆகிய இரு மிக முக்கிய பண்புகளையும் தான் மக்கள் பெருமளவில் வெளிப்படுத்தி உள்ளனர். மக்களின் வயது, பாலினம், கல்வி, அரசியல் சித்தாந்தம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இவற்றின் பொருத்தம் சீராக இருந்ததையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
தேர்தல்கள் இல்லாத நாடுகளைக் காட்டிலும், தலைவர்களை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் நாடுகளை அதிக ஜனநாயகம் மிக்க நாடுகளாக ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.
தேர்தல்கள் மற்றும் சிவில் உரிமைகளுக்குப் பிறகு, ஒரு நாட்டை ஜனநாயகமாக்குவதற்கு பாலின சமத்துவம், பின்னர் பொருளாதார சமத்துவம் ஆகியவை அடுத்தடுத்த முக்கிய பண்புகளாக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
பாலின உரிமைகளில் சமத்துவமின்மை உள்ள நாடுகளை விட ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகள் உள்ள நாடுகள் ஜனநாயக நாடுகளாகக் கருதப்படுகின்றன. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான தூரம் குறைவாக உள்ள நாடுகளே ஜனநாயக நாடாக உள்ளதாக மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
தேர்தல்கள் அல்லது சிவில் உரிமைகள் என இரண்டும் இல்லாவிட்டாலும், அரசு நிறுவனங்கள் இடையேயான அதிகாரப் பகிர்வு மற்றும் சமநிலைகள் உள்ள நாடு ஜனநாயகத்திற்கு அடுத்த முக்கிய காரணியாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.
தலைவர்களை தேர்ந்தெடுக்க மக்கள் நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கும் நாடுகளை ஜனநாயக நாடாக கருதப்பட்டாலும், மற்ற காரணிகளுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் முக்கியமற்ற ஒரு பண்பாக்க ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.
ஜனநாயகத்தில் “சர்வாதிகாரம்” ஒளிந்துள்ளது என்ற சிறிய ஆதாரங்களையும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைத்துள்ளனர். எகிப்து, தாய்லாந்து போன்ற சர்வாதிகார நாடுகளில் உள்ள மக்களும், ஜனநாயகம் என்பது தேர்தல்கள் மற்றும் சுதந்திரங்களில் வேரூன்றி உள்ளதாகவே கருதுகின்றனர்.
‘தேர்தல்கள் மற்றும் சிவில் உரிமைகளே ஒரு நாட்டை ஜனநாயகமாக்குவதற்கான முக்கிய பண்புகளாக இருப்பதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்துவதை நாங்கள் கண்டறிந்தோம்’ என ஆக்ஸ்போர்டு பல்கலைக்க பேராசிரியர் ஸ்காட் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் மிக முக்கியமான பண்புகளைப் பற்றிய மக்களிடையேயான இந்த புரிதல், மக்களால் ஜனநாயகமற்ற நடத்தையை அடையாளம் காண முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜனநாயகம் மீது அடக்குமுறை நிகழும் இந்த சகாப்தத்தில் ஜனநாயகம் பற்றிய கருத்து அதிகளவில் குழப்பமடைந்துள்ளது. ஜனநாயகத்தின் வழக்கமான பண்புகள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கு முறையான ஆதாரங்களை இந்த ஆய்வு வழங்கியுள்ளதாக எமோரி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். எஃப். யூங் தெரிவித்துள்ளார்.