மறக்க முடியுமா அந்த இரவை? 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு டி.வி.யில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அன்றைய நள்ளிரவு முதல் 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்றிக்கொள்ள கால அவகாசம் அறிவித்தார். நாட்டில் மிதமிஞ்சி இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று பிரதமர் அறிவித்தார்.
நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பு இந்தியப் பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சல் என்றும், இதன் மூலம் நாட்டில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் கனவை தவிடுபொடியாக்கி தூங்கவிடாமல் செய்துவிட்டார் என்றும், ‘புதிய இந்தியா பிறந்துள்ளது’ என்றும் அவரது கட்சியினர், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் உள்ளிட்ட பிற துறைகளின் பிரபலங்கள் ஏ.சி. அறையில் உட்கார்ந்து ட்வீட் செய்து மகிழ்ந்தனர்.
சிறுகச் சிறுக பணம் சேர்த்திருந்த நடுத்தர மக்கள் நள்ளிரவில் நடுரோட்டில் வந்து நின்றனர். வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் முன் நீண்ட வரிசையில் இந்தியாவே காத்திருந்தது. தங்களிடம் உள்ள 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு படாதபாடு பட்டனர். காலையில் வங்கிகள் திறக்கப்பட்டபோதும் கூட்டம் அலைமோதியது. மயங்கி விழுந்தவர்கள், இறந்து போனவர்கள் என மக்களின் நிலை பரிதாபமானது. ஏழை-எளிய மக்கள் தங்கள் சிறுவாட்டு சேமிப்பை என்ன செய்வது என்று புரியாமல் தவித்தனர். பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிப்படைந்தன.
அப்போது பிரதமர் மோடி, “எனக்கு 50 நாள் அவகாசம் கொடுங்கள். நான் மேற்கொண்ட கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தவறு என்றால் என்னை உயிருடன் கொளுத்துங்கள்” என்று ஆவேசமாக சொன்னார். ஆனால் நடந்தது என்ன?
பணத்தை மாற்றிக்கொள்வதற்காக மோடி அரசு அளித்த காலக்கெடு முடிந்தபோது, 15 லட்சத்து 44ஆயிரம் கோடி ரூபாய்க்காக 1000, 500 ரூபாய் தாள்கள் வங்கிகள் மூலமாக மாற்றப்பட்டிருந்தன. அதாவது, 90 சதவீதத்திற்கு மேலான பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டது. இதைத்தான் கருப்புப் பணம் என்று மோடி அரசு கணக்கிட்டிருந்தது. கருப்புப் பணம் என்றால் கணக்குக்கு வர முடியாது. கணக்குக்கு வந்தால் அது கருப்புப் பணம் அல்ல. ஏழை-நடுத்தர மக்களின் பணம்தான் திரும்பியது. பெரிய பணக்காரர்கள் பதுக்கி வைத்தது திரும்பவில்லை. ஒரு சில பெரிய பணக்காரர்கள் இன்னமும் இந்தியாவுக்கே திரும்பி வரவில்லை.
1000, 500 ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதன் மூலம் பணம் பதுக்குவது குறையும் என்று சொன்ன மோடி அரசு, அதற்குப் பதிலாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. உண்மையில், அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுதான் பதுக்கலுக்கு எளிதானது. அதுமட்டுமின்றி, 500 ரூபாய் நோட்டை மீண்டும் கொண்டு வந்தது. இந்தக் குழப்பங்களினால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்தது. தான் அறிமுகப்படுத்திய 2000 ரூபாய் நோட்டையும் மோடி அரசே பின்னர் பணமதிப்பிழப்பு செய்துவிட்டது.
மக்களை வாட்டிய நவம்பர் 8, 2016ன் காயத் தழும்புகள் இன்னும் மறையவில்லை. அதன் மீது மோடி அரசு பூசிய தழும்புதான் டிஜிட்டல் இந்தியா. பணப் பரிவர்த்தனையை மின்னணு தொழில்நுட்பம் வாயிலாகப் பயன்படுத்தும் முறை இந்தியாவில் வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான். பாப்கார்ன் வாங்குவது முதல் ஃப்ளைட் டிக்கெட் எடுப்பது வரை பலவற்றிலும் இப்போது டிஜிட்டல் முறையை மக்கள் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இப்போதும் பெரிய அளவில் சொத்துகள் வாங்கும் பணக்காரர்கள் கரன்சி பரிவர்த்தனையில்தான் ஈடுபடுகிறார்கள் என்பதை வணிகத்துறை சார்ந்த ஆய்வு நிறுவனங்கள் புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டு வருகின்றன. 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போதும் பல துறைகளில் கரன்சி பரிவர்த்தனை இரு மடங்கிற்கு மேல் உயர்ந்திருக்கிறது.
புதிய இந்தியா என்று பேச வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசின் படுதோல்விகளில் முதன்மையானது. மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பதற்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் முடிச்சுப் போட்டு பெருமைப்படுவதற்கு எதுவுமில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனையின் முன்னேறியுள்ள நாடுகள் எதுவும் மக்களை இப்படிப் பதற வைக்கவில்லை. மின்சாரம் முதல் கைப்பேசி வரை அறிவியல் தொழில்நுட்பங்கள் அதனதன் பயன்பாட்டின் அடிப்படையில் மக்களிடம் செல்வாக்குப் பெற்றன. பயத்தைப் போக்கின. ஆனால், இந்தியாவில் மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பதற்றத்தையும் பயத்தையும் பெருக்கி, மக்களை திணறச் செய்தது. மீண்டு வருவதற்குள் பெரும்பாடு படுத்திவிட்டது.
புதிய இந்தியா பிறந்தபோதே இறந்துவிட்டது. பழைய இந்தியா தனது மதிப்பை இழந்து, மெல்ல மெல்ல உயிர் மீண்டு கொண்டிருக்கிறது.