நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் ஆல்சைமர் நோய் (Alzheimer disease), தொடக்கத்தில் மெதுவாக ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல மோசமான நிலைக்கு மாற்றும் ஒரு நாட்பட்ட நோயாகும். 60-70 சதவீத மறதிநோய் இந்த ஆல்சைமர் நோயினால் ஏற்படுவதாகும்.
திசுக்கள் அழிவினால் உருவாகும், குணப்படுத்த முடியாத இந்நோயை 1906-ம் ஆண்டில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மனநோய் மருத்துவரான ஆலோயிசு ஆல்சைமர் (Alois Alzheimer) என்பவர் முதன் முதலில் கண்டறிந்து விளக்கினார்.
இந்தியாவில், வயதான மக்கள்தொகை அதிகரித்து வருவதன் காரணமாக ஆல்சைமர் நோய்யும் அதிகமாக பரவி வருகிறது. 40 லட்சம் மக்கள் சில வகையான மறதிநோயால் (Dementia) பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் அல்சைமர் மிகவும் பொதுவானதாக உள்ளது. இருப்பினும், இந்நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோயறிதல் விகிதங்கள் மிக குறைவாகவே உள்ளதால், இது போதிய கவனம் பெறாமல் மக்களிடையே தாமதமான சிகிச்சைகளுக்கு வழிவகுக்கிறது.
ஆல்சைமர் நோயில் ‘மனநலம்’ முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. குறிப்பாக மனச்சோர்வு(Depression), அல்சைமர் நோய் வருவதற்கான அபாயத்தை அதிகப்படுத்தும் ஒன்றாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
‘மனச்சோர்வு’ மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று துளசி ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.கோரவ் குப்தா கூறியுள்ளார்.
மனச்சோர்வின் போது, ‘Cortisol’ எனப்படும் மன அழுத்த ஹார்மோன் இயக்குநீர் சுரக்கும்; அந்த சுரப்பியால், உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு சேதம் உண்டு செய்து புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடிய ‘ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்’ (Oxidative Stress) மற்றும் ‘அழற்சி’ ஏற்பட வழிவகுக்கிறது, என்றும் கூறியுள்ளார்.
இந்த ‘ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்’ பின்னாளில் ஆல்சைமர் நோய் வருவதற்கு காரணியாகவும் உள்ளது.
மனச்சோர்வுக்கும் ஆல்சைமர் நோய்க்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், ஒட்டுமொத்த ஆபத்தைக் குறைப்பதற்கு மனநலத்தைப் பாதுகாப்பது முக்கியம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மனச்சோர்வுக்கு உடனடி சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் மூளையில் அதன் நீண்டகால விளைவுகளைத் தணித்து, ஆல்சைமர் நோய் ஏற்படுவதை குறைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில், மனச்சோர்வு பாதிப்பைக் கொண்டவர்கள் பிற்காலத்தில் ஆல்சைமர் நோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உடையவர்களாக உள்ளனர் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே உளவியல் துன்பம் மற்றும் தனிமை உணர்வு கொண்டவர்களாக இருக்கும் வயதான நபர்களிடையே, நினைவக பிரச்சனைகளும் ஆல்சைமர் நோய் ஏற்படும் அறிகுறிகளும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஆல்சைமர் நோயாளிகளின் மனநல பாதிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அறிவாற்றல் இழப்பு விகிதத்தைக் குறைக்கவும் உதவும் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆரம்பகால நோய் கண்டறிதல், மனநல பாதுகாப்பு, ஆல்சைமர் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலைமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்டவை இந்தியாவில் இந்நோயால் ஏற்படும் புதிய சவால்களை சமாளிக்க உதவும் என மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
News Source: John Hopkins Medicine, India Today, nih.gov