தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக துணை முதலமைச்சர் பதவி கவனம் பெற்றிருக்கிறது. முதல் முறை கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் 2009ல் துணை முதலமைச்சரானார் மு.க.ஸ்டாலின். இரண்டாவது முறை, 2017ல் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சரானார் ஓ.பன்னீர்செல்வம். மூன்றாவதாக 2024ல் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் துணை முதலமைச்சராகி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த மூன்று நியமனங்களிலும் ஆட்சிப் பொறுப்புக்குத் துணை என்ற கோணத்துடன் கட்சிக் கண்ணோட்டமும் உண்டு.
தி.மு.க.வில் மு.க.அழகிரிக்கு மத்திய கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில்தான், அந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பரப்புரை மேற்கொண்டு வெற்றிக்கு காரணமான மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. தர்மயுத்தம் நடத்தி அ.தி.மு.க.வுக்குள் கலகத்தை உருவாக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்வதற்காக டெல்லி அரசியலின் கரங்களாக ஆளுநர் செயல்பட்டு சமாதானப்படுத்தியதன் விளைவாகவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. தி.மு.கவின் இளம்தலைவர் எனப்படும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, கட்சியின் எதிர்கால நலன் கருதி துணை முதலமைச்சராகியிருக்கிறார்.
அரசியல் சாசனப்படி துணைப் பிரதமர் என்பதோ, துணை முதலமைச்சர் என்பதோ தனிப்பட்ட அதிகாரம் கொண்டவையல்ல. அதனால்தான், புதிதாக 4 அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் எந்தப் பதவிப் பிரமாணமும் எடுக்காமல் எதிரில் மற்ற அமைச்சர்களுடன் உட்கார்ந்து நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் துணை முதலமைச்சர் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, அதிகாரம் எதையும் கொடுக்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். இதுதான் துணை முதலமைச்சர் என்ற பதவியின் உண்மைத்தன்மை.
இந்தப் பதவியை அடைவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும், வாரிசு அரசியல்தான் தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும், பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்கிற சமூக நீதி இயக்கம் அதே பிறப்பின அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தரலாமா என்றும், தி.மு.க.வில் மூத்த அமைச்சர்கள் இருக்கின்றபோது இளையவரான உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா என்பன உள்ளிட்ட பல விமர்சன அம்புகள் அரசியல் களத்தில் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த விமர்சனங்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிடமுடியாது. உண்மையான விமர்சனங்களும், உண்மை போன்ற விமர்சனங்களும் கலந்துள்ளன.
விமர்சனங்களை வரவேற்பதாகவும் அவற்றுக்குத் தன் செயல்கள் மூலம் பதிலளிப்பதாகவும் உதயநிதி தெரிவித்திருப்பது 47 வயதான அவருக்குள்ள பக்குவத்தைக் காட்டுகிறது. அவருடைய தாத்தா கலைஞர் கருணாநிதி 45 வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே ஆகிவிட்டார். அப்போது தி.மு.க.வில் அவரைவிட மூத்தவர்களும் உண்டு என்பது கவனத்திற்குரியது. அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். இறந்தபிறகு, அந்தக் கட்சியில் இருந்த மூத்தவர்களைவிட செல்வி.ஜெயலலிதாதான் கட்சிக்குப் பொதுச்செயலாளரானதுடன் 43 வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். பா.ஜ.க.வில் உள்ள அத்வானி போன்ற மூத்தவர்களைக் கடந்து நரேந்திர மோடி மூன்று முறை பிரதமராகியிருப்பதும் கவனத்திற்குரியது.
அரசியல் களத்தில் அடித்து ஆடக்கூடியவர்கள் முன்னிறுத்தப்படுவதும், அதை அவர்கள் தொடர்ச்சியாக நிரூபிக்கும்போது அடுத்தடுத்த உயர்வுகள் கிடைப்பதும் எல்லாக் கட்சிகளிலும் தொடர்கின்றன. காங்கிரஸ் கட்சி ஜவகர்லால் நேருவில் தொடங்கி ராகுல்காந்தி வரை குடும்ப-வாரிசு அரசியல் தலைமையில் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக உள்ளது. பா.ஜ.க.வில் ராஜமாதா சிந்தியா முக்கியத் தலைவராக இருந்ததும், அவர் மகள் வசுந்தரராஜே சிந்தியா மத்திய அமைச்சராகவும்-ராஜஸ்தான் முதலமைச்சராகவும் இருந்ததும் வரலாறு. அமித்ஷா மகன் முதல் எடியூரப்பான மகன் வரை அவரவர் அளவிலான அதிகார மையத்திற்குத் தலைமை வகிக்கிறார்கள். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் மகன், ஜெயக்குமார் மகன் என வாரிசுகள் களமிறங்குகிறார்கள்.
75ஆண்டுகால தி.மு.க.வில் இது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சரானபோது பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட பல மூத்தவர்கள் இருந்தனர். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும்போதும் கட்சியில் மூத்தவர்கள் இருக்கிறார்கள். அதனால் விமர்சனக் கேள்விகள் வரவே செய்யும். நடப்பவை அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள். மக்களின் நம்பிக்கை பெற்று ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றே சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்ற உதயநிதி, தற்போது துணை முதலமைச்சராகியிருக்கிறார். விமர்சனங்களுக்கு அவரது செயல்பாடுகளே பதிலாக அமைய வேண்டும். களம் காத்திருக்கிறது.