1964ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மிக முக்கியமான மற்றும் பேரழிவு, டிசம்பர் மாதம் தனுஷ்கோடியைத் தாக்கிய பிரம்மாண்டமான புயல் பாதிப்பு ஆகும்.
தனுஷ்கோடி :
தனுஷ்கோடி (Dhanushkodi) இந்தியாவின், தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரம் ஆகும். இது பாம்பனுக்கு தென் கிழக்கே, இராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது. மேலும், இந்தியப் பெருங்கடலும் (மன்னார் வளைகுடா), வங்காள விரிகுடாவும் சந்திக்கும் இடமான ‘அரிச்சல் முனை’ இங்குதான் உள்ளது.

1914ல் தனுஷ்கோடி, இலங்கை தலைமன்னார் இடையே இரு பயணிகள் கப்பல் போக்குவரத்தும், சென்னை முதல் தனுஷ்கோடி வரை ‘ போட் மெயில் ‘ எனும் பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தும் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இந்த இரு போக்குவரத்தும் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கியது.மேலும் தனுஷ்கோடியில் துறைமுகம், மருத்துவமனை கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், தபால்நிலையம், ரெயில் நிலையம், ஆலயங்கள் இருந்தன.
1964ஆம் ஆண்டு புயலால் உருக்குலைந்த தனுஷ்கோடி :
இந்நிலையில், 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் (cyclone) கடந்த போது இராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து, தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. இதனையடுத்து, தனுஷ்கோடியையும், பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை, வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. மேலும், தனுஷ்கோடி கடற்கரையில் இருந்த அனைத்து கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின.

மேலும், அன்றிரவு உறங்கிக்கொண்டிருந்த மீனவர்கள், அவர்கள் குடும்பத்தினர் குறிப்பாக பள்ளி விடுமுறைக்காக 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த ரெயில் ஒன்றும் அன்று இரவு ஏற்பட்ட கனமழை, சூறாவளி காற்றில் சிக்கி கொண்டது. இதனைத்தொடர்ந்து, தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட ரெயில் கடலுக்குள் மூழ்கியதில் அந்த ரயிலில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். 23-ந் தேதி அன்று இரவு வீசிய புயலால் தனுஷ்கோடியில் மட்டும் சுமார் 1,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் இந்த புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பலரது உடல்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.மேலும், இது வரலாற்றில் மறக்க முடியாத, அழிக்க முடியாத பேரழிவாக நிகழ்வாக மாறியது.
வாழத் தகுதியற்ற நகரம் :
பேரழிவைத் தொடர்ந்து, அரசால் தடைசெய்யப்பட்ட பகுதியாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்த காட்சிகள் வரலாற்றில் ஒரு சோக சுவடுகளாகவே இன்று வரை அறியப்படுகின்றன. தனுஷ்கோடி துறைமுகம் முழுமையாக இடிந்து சேதம் அடைந்ததால் அங்கிருந்து தலைமன்னாருக்கு சென்று வந்த கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. கடந்த 1983-ம் ஆண்டு வரையிலும் கப்பல் போக்குவரத்து விடப்பட்டு அது நாளடைவில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, பாம்பன் ரெயில் பாலமும் சீரமைக்கப்பட்டு ராமேசுவரம் வரை ரெயில் போக்குவரத்து இயக்கப்பட்டது.

தற்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு, பாலம், முகுந்தராயர்சத்திரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தற்காலிகமாக குடிசைகளை அமைத்து தினமும் நாட்டுப்படகு, சிறிய வத்தைகளில் சென்று மீன்பிடித்தும், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதாவது, சுற்றுலாப் பயணிகளுக்கு மீன் சுட்டுத் தருவது, சிப்பி, முத்துக்களால் ஆன மணி மாலைகளால் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.
சுற்றுலாத் தளங்களாக மாறிய தனுஷ்கோடி :
மேலும், முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடியின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை கடற்கரை வரை 9.5 கி.மீ.. தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, கோதண்டராமர் கோயில்,அரிச்சல் முனை,தனுஷ்கோடி கடற்கரை, இராமர் பாலம் ஆகியவை சுற்றுதலங்களாக இருந்து வருகிறது. தொடர்ந்து, இராமேஸ்வரம் (Rameswaram) கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அரிச்சல்முனை கடற்கரை வரை வந்து செல்கின்றனர். இராமேஸ்வரம் கோயிலில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், 45 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பெருமளவில் தனுஷ்கோடிக்கு வந்து செல்கின்றன.

